search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குரூப்-1 தேர்வு முறைகேட்டை கண்டித்து பா.ம.க. போராட்டம்: ராமதாஸ் அறிக்கை
    X

    குரூப்-1 தேர்வு முறைகேட்டை கண்டித்து பா.ம.க. போராட்டம்: ராமதாஸ் அறிக்கை

    குரூப்-1 தேர்வு முறைகேட்டை கண்டித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 19 துணை ஆட்சியர்கள், 26 காவல் துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 74 முதல் தொகுதி பதவிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதன்மைத் தேர்வில் விடைத்தாள்கள் மாற்றப்பட்டது. விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த 28ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன். இந்தக் குற்றச்சாற்றுகளை தேர்வாணையம் மறுத்திருக்கிறது.

    விடைத்தாள்களில் பதிவெண் மறைக்கப்பட்டு அதற்கு பதிலாக மாற்று எண் வழங்கப்பட்டு தான் திருத்தும் பணிக்காக அனுப்பப்படுவதாகவும், அதனால் விடைத்தாள்களை மாற்ற முடியாது என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது கடந்த நூற்றாண்டிலிருந்து கடை பிடிக்கப்பட்டு வரும் முறை தான். இப்படி செய்தால் விடைத்தாள்களை மாற்ற முடியாது என்பதை மூன்றாம் வகுப்பு பயிலும் குழந்தை கூட நம்பாது.

    அதுமட்டுமின்றி, இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் தான். தேர்வாணையத்தின் அனைத்து செயல்பாடுகளும் அவர்களுக்கு அத்து படி. அவர்களும், சில தனியார் பயிற்சி நிறுவனங்களும் கூட்டணி அமைத்துக் கொண்டு தான் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். தேர்வாணைய முறைகேடுகள் குறித்த எனது குற்றச்சாற்றுகள் உண்மையானவை; அதிலிருந்து பின்வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் தொகுதி முதன்மைத் தேர்வு முடிவுகளை ரத்து செய்துவிட்டு, அதில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரணைக்கு ஆணையிட வேண்டும். அத்துடன், சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட தேர்வாணையத்தின் உறுப்பினர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் வரும் 8ஆம் தேதி சனிக் கிழமை காலை 10.00 மணிக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் முன்னாள் தொடர் வண்டித்துறை அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளருமான ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்வர். பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என விரும்பும் போட்டித்தேர்வர்களும் இதில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறேன்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    Next Story
    ×