search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் போலி ரே‌ஷன் கார்டுகள் தயாரிப்பு: பொது சேவை மைய உரிமையாளர் கைது
    X

    பெரம்பலூரில் போலி ரே‌ஷன் கார்டுகள் தயாரிப்பு: பொது சேவை மைய உரிமையாளர் கைது

    பெரம்பலூரில் அரசு பாஸ்வேர்டை பயன்படுத்தி போலி ரே‌ஷன் கார்டுகளை தயாரித்த பொது சேவை மைய உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பலூர்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 32) எம்.சி.ஏ. பட்டதாரி. பெரம்பலூர் மாவட்டம் தொண்ட மாந்துறையைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ள இவர் பெரம்பலூர் சங்குப்பேட்டை அருகே டிஜிட்டல் இண்டியா என்ற பெயரில் பொது சேவை மையம் நடத்தி வந்தார்.

    இந்நிலையில் வட்ட வழங்கல் அலுவலகங்களில் புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள், ரேசன் கார்டுகளில் திருத்தம் கோரியவர்கள், புகைப்படம் இணைக்க விண்ணப்பித்தவர்களின் பட்டியல் காத்திருப்பில் உள்ள நிலையில் ராஜா நடத்தி வந்த டிஜிட்டல் இந்தியா பொது சேவை நிலையத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு உடனுக்குடன் புது ரேசன் கார்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டும் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டும் வந்தது. இதனால் ராஜாவின் மையத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட அளவில் வழங்கல் துறையில் ஒரு நாளில் 45 பேருக்கு புது ரேசன் கார்டுகள் வழங்க மாவட்ட வழங்கல் அலுவலர் மூலம் அனுமதி அளித்திருந்தால் அடுத்த நாள் அலுவலக கணக்கில் 65 பேருக்கு புது ரேசன் கார்டு வழங்கப்பட்டதாக பட்டியலில் இருக்கும்.

    20 பேருக்கு கூடுதலாக ரேசன் கார்டு வழங்க அனுமதி வழங்கவில்லையே என மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் திகைத்து வந்தனர். அதே போல் ரேசன் கார்டு திருத்தப் பட்டியலிலும் முந்தைய நாள் கணக்கை விட கூடுதலாக திருத்தம் செய்து அதற்கு டி.எஸ்.ஓ. அனுமதி வழங்கியதாக புள்ளி விபரங்கள் காட்டி வந்தது.

    இதனால் சந்தேகமடைந்த தாசில்தார் பாலகிருஷ்ணன் மற்றும் வழங்கல் துறையினர் ராஜாவின் பொது சேவை மையத்தை சோதனையிட்டனர்.

    அப்போது பெரம்பலூர் மாவட்ட வழங்கல் அலுவலரின் அரசாங்க யூசர் நேம், பாஸ்வேர்டு ஆகியவற்றை பயன்படுத்தி பலருக்கும் மாவட்ட வழங்கல் அலுவலர் அனுமதி அளித்தது போல் புதிய ரேசன் கார்டுகளுக்கு அனுமதி வழங்கி வருவதும், ரேசன் கார்டுகளில் சம்பந்தமில்லாதவரின் பெயர்களை சேர்த்து வந்ததும் கண்டறியப்பட்டது.

    இதையடுத்து உணவுப் பொருள் வழங்கல் துறை தனி வருவாய் ஆய்வாளர் கபிலன், பெரம்பலூர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிந்து ராஜாவை கைது செய்தார்.

    மாவட்ட வழங்கல் துறையில் முறையாகக் கணக்கெடுத்து பார்த்தால் தான் ராஜாவின் தில்லு, முல்லுவால் எவ்வளவு போலி ரேசன் கார்டுகளுக்கு சட்ட விரோதமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது தெரிய வரும். இச்சம்பவம் பெரம்பலூர் மாவட்ட வழங்கல் துறையில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×