search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    1 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்ந்ததால் தி.மு.க.வில் 2 கோடி உறுப்பினர்கள்- இணையதளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
    X

    1 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்ந்ததால் தி.மு.க.வில் 2 கோடி உறுப்பினர்கள்- இணையதளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    • அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி, 2 கோடி தொண்டர்களுடன் அந்த பட்டியலில் தி.மு.க. முதலிடம் பிடித்து உள்ளது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சியையும், மாநில மக்களுடன் அவர் மேற்கொண்ட பயணத்தை யும் கண்டு, நாள் தோறும் ஏராளமானோர் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட தி.மு.க. வில் தற்போது 2 கோடி தொண்டர்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி தி.மு.க.வில் மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் நடை பெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கேட்டுக் கொண்டார். இதற்காக அந்த கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 4-ந்தேதி புதிய உறுப்பினர் சேர்க்கையை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றைய தினமே உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ந் தேதிக்குள் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதால் ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, கிளை கழகம் வாரியாக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வந்தது. இப்போது இந்த பணி முடிவடைந்துள்ளது.

    இதையொட்டி தி.மு.க.வின் புதுப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதில் தி.மு.க.தொடர்பான பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் இடம் பெற்று உள்ளன. குறிப்பாக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. வில் 2 கோடி கட்சி உறுப்பினர்கள், 23 சார்பு அணிகள், 125 சட்டமன்ற உறுப்பினர்கள், 20 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1.5 கோடி தொண்டர்களுடன் கொண்ட கட்சி அ.தி.மு.க. தான் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி, 2 கோடி தொண்டர்களுடன் அந்த பட்டியலில் தி.மு.க. முதலிடம் பிடித்து உள்ளது.

    இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சியையும், மாநில மக்களுடன் அவர் மேற்கொண்ட பயணத்தை யும் கண்டு, நாள் தோறும் ஏராளமானோர் கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் எங்கள் இலக்கான 2 கோடி கட்சி உறுப்பினர்கள் தி.மு.க.வில் இடம் பெற வேண்டும் என பாடுபட்டோம். அந்த இலக்கை இப்போது நாங்கள் அடைந்துவிட்டோம் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×