என் மலர்
விளையாட்டு

IPL 2025: பெங்களூரு- லக்னோ அணிகள் இன்று மோதல்
- இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
- 3-ல் பெங்களூருவும், 2-ல் லக்னோவும் வெற்றி பெற்றுள்ளன.
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இன்றிரவு லக்னோவில் நடைபெறும் 59-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
லக்னோ அணி 11 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி என 10 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. முதல் 6 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்ற அந்த அணி அடுத்த 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டது. இதில் கடைசி 3 ஆட்டங்களில் வரிசையாக தோற்றதும் அடங்கும். இனி எஞ்சிய 3 ஆட்டங்களில் வெற்றி பெறுவதுடன், மற்ற ஆட்டங்களின் முடிவும் சாதகமாக அமைந்தால் தான் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைய முடியும். எனவே இன்றைய ஆட்டம் அந்த அணிக்கு வாழ்வா-சாவா? போன்றதாகும். இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று கனவு கலைந்து விடும்.
லக்னோ அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (410 ரன்), மிட்செல் மார்ஷ் (378), மார்க்ரம் (348), ஆயுஷ் பதோனி (326) அதிரடியில் அசத்துகின்றனர். கேப்டன் ரிஷப் பண்ட் (11 ஆட்டத்தில் 128 ரன்), டேவிட் மில்லர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆடவில்லை. பந்து வீச்சில் திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் சில ஆட்டங்களில் நன்றாக பந்து வீசியுள்ளனர். பந்து வீச்சில் ஏற்றம் காண வேண்டியது அவசியமாகும்.
ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் எடுத்து 2-வது இடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி கண்டால் முதல் அணியாக அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விடும். அந்த அணி தனது முந்தைய 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.
பேட்டிங்கில் விராட் கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார். அவர் 7 அரைசதங்களுடன் 505 ரன்கள் குவித்துள்ளார். கேப்டன் ரஜத் படிதார், பில் சால்ட், ஜேக்கப் பெத்தேல் பயனுள்ள பங்களிப்பை அளிக்கின்றனர். காயத்தால் தேவ்தத் படிக்கல் விலகியிருப்பது சற்று பின்னடைவாகும். பந்து வீச்சில் ஹேசில்வுட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள் மிரட்டுகிறார்கள்.
மொத்தத்தில் பெங்களூரு அணியின் வீறுநடைக்கு முட்டுக்கட்டை போட லக்னோ அணி எல்லா வகையிலும் வரிந்து கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 3-ல் பெங்களூருவும், 2-ல் லக்னோவும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஆவேஷ் கான், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய் அல்லது ஆகாஷ் சிங்.
பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், லுங்கி இங்கிடி, யாஷ் தயாள், ஹேசில்வுட் அல்லது சுயாஷ் ஷர்மா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.






