என் மலர்
விளையாட்டு

IPL 2025: கொல்கத்தா- சென்னை அணிகள் இன்று மோதல்
- இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- சென்னை 19 ஆட்டங்களிலும், கொல்கத்தா 11 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். 'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு 9 வெற்றிகள் தேவையாகும்.
இதுவரை எந்த அணியும் அடுத்த சுற்றை உறுதி செய்யவில்லை. இன்னும் 14 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதால் இனி ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் இன்றிரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அரங்கேறும் 57-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை சந்திக்கிறது.
கொல்கத்தா அணி நடப்பு தொடரில் சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 11 ஆட்டங்களில் ஆடியுள்ள அந்த அணி 5 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை (பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 11 புள்ளிகள் எடுத்து 6-வது இடம் வகிக்கிறது. முந்தைய 2 ஆட்டங்களில் டெல்லி, ராஜஸ்தானை அடுத்தடுத்து வீழ்த்தியதால் அவர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு எஞ்சிய 3 ஆட்டங்களும் முக்கியமானதாகும். மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதுடன், ரன்ரேட்டையும் வலுப்படுத்தி மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைந்தால் தான் அந்த அணிக்கு அடுத்த சுற்றுக்கான வாயில் கதவு திறக்கும். ஒன்றில் தோற்றாலும் ஏறக்குறைய வெளியேற வேண்டியது தான்.
கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரஹானே (327 ரன்கள்), அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல் நம்பிக்கை அளிக்கின்றனர். வெங்கடேஷ் அய்யர், ரமனுல்லா குர்பாசும் பார்முக்கு திரும்பினால் பேட்டிங் வலுவடையும். பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுனில் நரின் மிரட்டுகிறார்கள்.
சென்னை அணி வழக்கத்துக்கு மாறாக இந்த சீசனில் தகிடுதத்தம் போடுகிறது. 11 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (மும்பை, லக்னோவுக்கு எதிராக), 9 தோல்வியுடன் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் இருப்பதுடன், ஏற்கனவே அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பையும் பறிகொடுத்து விட்டது.
கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வி கண்ட சென்னை அணி முந்தைய ஆட்டத்தில் பெங்களூருவுக்கு எதிராக 214 ரன் இலக்கை விரட்டுகையில் 211 ரன்களே எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரே (94 ரன்), ரவீந்திர ஜடேஜா (77 ரன்) அதிரடி காட்டி அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். ஆனால் கடைசி ஓவரில் 15 ரன் தேவையாக இருந்த போது டோனி ஆட்டமிழந்தது தோல்விக்கு வழிவகுத்தது.
இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் எஞ்சிய ஆட்டங்களில் அச்சமின்றி செயல்பட்டு ஆறுதல் வெற்றி பெறுவதுடன், புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க சென்னை அணி தீவிரம் காட்டும். அத்துடன் கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 103 ரன்னில் அடங்கி 8 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கவும் முயற்சிக்கும். அதே நேரத்தில் 6-வது வெற்றியை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க கொல்கத்தா அணி வரிந்து கட்டும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை 19 ஆட்டங்களிலும், கொல்கத்தா 11 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
மற்றொரு வகையிலும் இந்த ஆட்டம் கவனத்தை ஈர்க்கிறது. டோனிக்கு பிடித்தமான மைதானங்களில் ஈடன் கார்டனும் ஒன்று. இங்கு தான் முதல் தர கிரிக்கெட்டில் தனது 'கன்னி' சதத்தை பதிவு செய்தார், இரண்டு டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். 43 வயதான டோனி கொல்கத்தா ஈடன்கார்டனில் விளையாடும் கடைசி போட்டியாக இது இருக்கலாம் என்று கருதப்படுவதால், மஞ்சள் படையினரின் படையெடுப்பும், ஆரவாரமும் மைதானத்தில் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
கொல்கத்தா: ரமனுல்லா குர்பாஸ், சுனில் நரின், ரஹானே (கேப்டன்), ரகுவன்ஷி, ஆந்த்ரே ரஸ்செல், ரிங்கு சிங், வெங்கடேஷ் அய்யர், ரமன்தீப் சிங், மொயீன் அலி, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.
சென்னை: ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷீத் அல்லது உர்வில் பட்டேல், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, டிவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, டோனி (கேப்டன்), தீபக் ஹூடா, நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷூல் கம்போஜ், பதிரானா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.