என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இங்கிலாந்துக்கு எதிரான 5-வது போட்டி இன்று தொடக்கம்: தொடரை சமன் செய்யுமா இந்திய அணி?
    X

    இங்கிலாந்துக்கு எதிரான 5-வது போட்டி இன்று தொடக்கம்: தொடரை சமன் செய்யுமா இந்திய அணி?

    • இரு அணி வீரர்களும் இரு தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
    • இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது. 4-வது டெஸ்ட் 'டிரா' ஆனது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் இரு தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    கடைசி டெஸ்டுக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது. பந்து தாக்கி கால்பாதத்தில் எலும்பு முறிவுக்குள்ளான விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விலகி விட்டார். இதே போல் 'நம்பர் ஒன்' வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஓய்வு கொடுக்கும்படி கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. நடப்பு தொடரில் 119.4 ஓவர்கள் பந்து வீசி 14 விக்கெட் வீழ்த்தி இருக்கும் பும்ராவுக்கு, ஏற்கனவே முதுகில் ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது. அதிகமான போட்டிகளில் ஆடும் போது மீண்டும் முதுகில் சிக்கல் வந்து விடக்கூடாது என்பதால் இந்த டெஸ்டில் வெளியே உட்கார வைக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் களம் காணுகிறார். இதே போல் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இடத்தை துருவ் ஜூரெல் நிரப்புகிறார். ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.

    நடப்பு தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் பட்டையை கிளப்புகிறது. கேப்டன் சுப்மன் கில் (722 ரன்), லோகேஷ் ராகுல் (511 ரன்), ரவீந்திர ஜடேஜா (454 ரன்) ஆகியோர் ரன்வேட்டை நடத்தியுள்ளனர். முந்தைய டெஸ்டில் 311 ரன்கள் பின்தங்கி இருந்த போதிலும் இந்திய அணி ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அற்புதமான சதத்தால் 143 ஓவர்கள் போராடி 'டிரா' செய்தது.

    இந்த பயணத்துக்கு முன்பாக விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் தாக்குப்பிடிக்குமா? என்று கேள்வி எழுந்தது. ஆனால் முதல் 4 டெஸ்களிலும் ஆட்டத்தை 5-வது நாளுக்கு அதுவும் கடைசி பகுதி வரை இழுத்து சென்று தொடரையே பரபரப்பும், சுவாரசியமும் நிறைந்ததாக மாற்றி இருக்கிறது, நமது அணி. பந்து வீச்சிலும் தாக்கத்தை ஏற்படுத்தினால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.

    தொடரை பறிகொடுக்காமல் 2-2 என்று சமன் செய்தாலே அது பெரிய சாதனையாக இருக்கும். 2021-22-ம் ஆண்டு தொடரையும் இந்தியா 2-2 என்ற கணக்கில் சமன் தான் செய்திருந்தது. எனவே இந்திய அணி, இங்கிலாந்தின் ஆக்ரோஷத்துக்கு முட்டுக்கட்டை போட்டு வெற்றியோடு நிறைவு செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. 4-வது டெஸ்டில் வலது தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்ட கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உடல்தகுதியை எட்டவில்லை. இதனால் முக்கியமான இந்த டெஸ்டில் இருந்து விலக வேண்டியதாகி விட்டது. அவருக்கு பதிலாக துணை கேப்டன் ஆலி போப் அணியை வழிநடத்துகிறார். கடந்த இரு டெஸ்டிலும் ஆட்டநாயகனாக ஜொலித்த பென் ஸ்டோக்ஸ் (304 ரன் மற்றும் 17 விக்கெட்) இல்லாதது நிச்சயம் இங்கிலாந்துக்கு பின்னடைவு தான். இதே போல் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் லியான் டாசன், பிரைடன் கார்ஸ் கழற்றி விடப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பதிலாக ஜேக்கப் பெத்தேல், அட்கின்சன், ஜேமி ஓவர்டான், ஜோஷ் டாங்கு ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளனர்.

    சில முன்னணி வீரர்கள் ஒதுங்கினாலும் இங்கிலாந்து பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. சூப்பர் பார்மில் உள்ள ஜோ ரூட் (2 சதம் உள்பட 403 ரன்), பென் டக்கெட் (365 ரன்), விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் (424 ரன்) தொடர்ந்து ரன்மழை பொழிய காத்திருக்கிறார்கள்.

    பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், 'கடைசி டெஸ்டில் ஆட முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த போட்டியில் நான் இல்லாவிட்டாலும் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றும் என்று நம்புகிறேன். 4-வது டெஸ்ட் முடிந்து அடுத்த 3 நாட்களில் 5-வது டெஸ்ட் தொடங்குகிறது. இது போன்ற 5 டெஸ்ட் தொடரில் இந்த இடைவெளி மிகவும் குறைவாகும். அதிக ஓவர்கள் பந்து வீசியிருக்கிறோம். நிறைய நேரம் களத்தில் செலவிட்டு இருக்கிறோம். அதனால் குறைவான இடைவெளியில் போட்டி தொடங்குவது இரு அணிக்குமே கடினமாக இருக்கும். இரண்டு டெஸ்ட் போட்டியில் 8-9 நாள் இடைவெளி கிடைத்தது. அதற்கு பதிலாக ஒவ்வொரு போட்டிக்கும் சராசரியாக 4-5 நாட்கள் இடைவெளி கொடுத்திருக்கலாம்' என்றார்.

    போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    இந்தியா: ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் அல்லது குல்தீப் யாதவ் அல்லது அர்ஷ்தீப்சிங், முகமது சிராஜ், அன்ஷூல் கம்போஜ், ஆகாஷ் தீப்.

    இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி சுமித், கிறிஸ் வோக்ஸ், அட்கின்சன், ஜேமி ஓவர்டான், ஜோஷ் டாங்கு.

    இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ்1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    Next Story
    ×