என் மலர்
விளையாட்டு

ஆஷஸ் தொடர்... 5468 நாட்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
- 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை ஆடியது.
- ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட ஆஷஸ் தொடரில் 4-வது டெஸ்ட் மெல்போர்னில் நேற்று தொடங்கியது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 152 ரன்னில் ஆல் அவுட் ஆனது. மிச்சேல் நேசர் அதிகபட்சமாக 35 ரன் எடுத்தார். ஜோஸ் டங் 5 விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 110 ரன்னில் சுருண்டது. ஹாரி புரூக் அதிகபட்சமாக 41 ரன் எடுத்தார். மிச்சேல் நேசர் 4 விக்கெட்டும், போலண்டு 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
42 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்து இருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.
இங்கிலாந்து வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் சரிந்தன. மதிய உணவு இடைவேளைக்குள் 88 ரன்னில் 6 விக்கெட்டை பறி கொடுத்தது.
ஸ்காட் போலண்டு (6 ரன்), ஜேக் வெதரால்ட் (5), லபு ஷேன் (8), டிராவிஸ் ஹெட் (46), உஸ்மான் கவா ஜா (10), அலெக்ஸ் கேரி (4) ஆகியோர் ஆட்டம் இழந்தனர்.
அதை தொடர்ந்து விக்கெட்டுகள் எளிதில் விழுந்தன. ஆஸ்திரேலிய அணி 34.3 ஓவர்களில் 132 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்துக்கு 175 ரன் இலக்காக இருந்தது.
கேமரூன் கிரீன் 19 ரன்னிலும், நேசர், ஸ்டார்க் ரன் எதுவும் எடுக்காமலும், ரிச் சர்ட்சன் 7 ரன்னிலும் அவுட் ஆனார்கள். கேப்டன் ஸ்டீவ் சுமித் 24 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கார்ஸ் 4 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும், ஜோஸ் டங் 2 விக்கெட்டும், அட்கின்சன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
175 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர் பென்டக்கெட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 7-வது ஓவரில் தொடக்க ஜோடி சரிந்தது. டக்கெட் 26 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சர், 34 ரன் எடுத்து ஸ்டார்க் பந்தில் பெவிலியன் திரும்பினார். 2-வது விக்கெட்டுக்கு கிராவ்லியுடன் கார்ஸ் ஜோடி சேர்ந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. போட்டியின் இறுதிவரை 18 ரன்களுடன் ஹாரி புரூக் மற்றும் 3 ரன்களுடன் ஸ்மித் களத்தில் இருந்தனர்.
2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சிட்னியில் நடந்த ஐந்தாவது டெஸ்டில் வெற்றி பெற்ற பிறகு, சொந்த மண்ணிலிருந்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். 5468 நாட்கள், அதாவது 15 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக இது கருதப்படுகிறது.
ஆஷஸ் தொடரின் முதல் மற்றும் 4-வது போட்டிகள் 2 நாட்களில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.






