என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் உலக கோப்பை: இந்தியாவுக்கு 339 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
- எலிஸ் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் அதிரயாக விளையாடி 93 பந்தில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- இந்திய தரப்பில் ஸ்ரீ சரணி, தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரைஇறுதியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் அலிசா மற்றும் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் களமிறங்கினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட அலிசா 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனால் வீரர்கனைகள் முதல் இந்திய ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இவரது விக்கெட்டை முதலிலேயே வீழ்த்தியதால் அணியின் ஸ்கோர் பெரிய அளவில் வராது என நினைத்த நிலையில் அடுத்த விக்கெட்டுக்கு ஃபோப் லிட்ச்ஃபீல்டுடன் எலிஸ் பெர்ரி ஜோடி சேர்ந்தனர்.
இந்த ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சுலபமாக எதிர் கொண்டு விளையாடினர். குறிப்பாக ஃபோப் லிட்ச்ஃபீல்ட் அதிரயாக விளையாடி சதம் விளாசினார். அவர் 93 பந்தில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் இருந்து பெர்ரி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அவர் 77 ரன்னில் அவுட் ஆனார்.
அதனை தொடர்ந்து ஆஷ்லீ கார்ட்னர் அதிரடியாக விளையாடி அரை சதம் (63) அடித்து ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இதனால் 49.5 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஸ்ரீ சரணி, தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
339 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்திய அணி எட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் உள்ளனர்.






