என் மலர்
கிரிக்கெட் (Cricket)

27.4 கோடி ஃபாலோவர்ஸ்... முடங்கிய விராட் கோலியின் Instagram பக்கம் மீட்பு
- 27.4 கோடி ஃபாலோவர்களைக் கொண்ட கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கியது.
- இது தொடர்பாக அவரது மனைவி அனுஷ்காவின் இன்ஸ்டாகிராம் கணக்கை டேக் செய்து ரசிகர்கள் காரணத்தை கேட்டு வந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. முன்னாள் கேப்டனான அவர் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஒரு நாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். கோலிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 27.4 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.
இந்த நிலையில் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் நள்ளிரவில் திடீரென்று முடங்கியது. அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை ரசிகர்கள் அணுகியபோது இந்தப் பக்கம் கிடைக்கவில்லை என்று காண்பித்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல் கோலியின் சகோதரர் விகாஸ் இன்ஸ்டாகிராம் கணக்கும் செயலிழக்கப்பட்டிருந்தது.
பல மணி நேரத்துக்கு பிறகு இன்று காலை 8.30 மணிக்கு கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த திடீர் முடக்கம் வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமா என்பது குறித்து கோலி, அவரது நிர்வாகக் குழு அல்லது இன்ஸ்டாகிராம் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.
கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கிய போது அதற்கான விளக்கத்தை அறிய ரசிகர்கள் முயன்றனர்.
சில ரசிகர்கள் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அண்ணாவின் (கோலி) கணக்கு எங்கே போனது?" என்பது போன்ற கருத்துக்களைப் பதிவிட்டனர்.






