என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டிராவிஸ் ஹெட் பொய் சொல்கிறார்.. கோபப்பட்டதற்கு விளக்கம் அளித்த சிராஜ்
- டிராவிஸ் ஹெட்டை நோக்கி சிராஜ் ஆக்ரோஷமாக கத்தினார்.
- சிராஜ் என்னை தவறாக புரிந்து கொண்டார் என்று டிராவிஸ் ஹெட் தெரிவித்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வந்தது . இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட்டின் சதம் (140 ரன்கள்) மற்றும் லபுஸ்சேனின் அரைசதத்தின் (64 ரன்கள்) உதவியுடன் 337 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் முகமது சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 157 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 175 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் 19 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்சின்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் வீசிய 82-வது ஓவரின் 3-வது பந்தை டிராவிஸ் ஹெட் சிக்சருக்கு பறக்க விட்டார். அதற்கு அடுத்த பந்திலேயே சிராஜ் அவரை கிளீன் போல்டாக்கி பதிலடி கொடுத்தார்.
அப்போது டிராவிஸ் ஹெட்டை நோக்கி சிராஜ் ஆக்ரோஷமாக கத்தியதுடன் 'போ' என்ற வகையில் சைகையும் காண்பித்தார். இதனால் இருவருக்குமிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய டிராவிஸ் ஹெட், "நான் நன்றாக பந்து வீசினாய் என்றுதான் கூறினேன். ஆனால் சிராஜ் என்னை தவறாக புரிந்துகொண்டார்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், டிராவிஸ் ஹெட் பொய் சொல்கிறார் என்று சிராஜ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய சிராஜ், "டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்திய பிறகு நான் கொண்டாடினேன். பின்னர் அவர் என்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்டார். இதை தொலைக்காட்சியிலும் நீங்கள் பார்க்கலாம். அப்போது நன்றாக பந்து வீசினாய் என்று டிராவிஸ் ஹெட் சொல்லவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பொய் சொன்னார். நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். அவர் பேசும் விதம் தவறானது. அது எனக்கு பிடிக்காததால் கோபப்பட்டேன்" என்று தெரிவித்தார்.






