என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆபத்தான பயிற்சியில் சாய் சுதர்சன் - துருவ் ஜூரல்: காரணம் இதுதான்
- சுப்மன் கில் ஆடுவது சந்தேகமாகியுள்ளதால் ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார்.
- இடக்கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் வலது காலில் காலுறை இன்றி வலை பயிற்சியில் ஈடுபட்டார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வருகிற 22-ந்தேதி கவுகாத்தியில் தொடங்கும் 2-வது டெஸ்டில், கழுத்துவலியால் அவதிப்படும் இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆடுவது சந்தேகமாகியுள்ளதால் அதை கவனத்தில் கொண்டு அணியில் கூடுதலாக ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, 2-வது டெஸ்டுக்கு புறப்படுவதற்கு முன்பாக கொல்கத்தாவில் இந்திய வீரர்கள் நேற்று பயிற்சி மேற்கொண்டனர். இதில் சாய் சுதர்சன், துருவ் ஜூரெல் ஆகியோர் ஒற்றைக்காலில் மட்டும் காலுறை (பேடு) கட்டிக் கொண்டு சுழற்பந்து வீச்சு யுக்தியை திறம்பட சமாளிப்பதற்கான பயிற்சி எடுத்தனர். இது கொஞ்சம் ஆபத்தான பழங்கால பயிற்சி முறையாகும். பந்து நேராக காலில் தாக்கினால் எலும்பு முறிவு கூட ஏற்படலாம்.
இடக்கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் வலது காலில் காலுறை இன்றி வலை பயிற்சியில் ஈடுபட்டார். முன்னங்காலை எடுத்து வைத்து பந்தை தடுப்பதை காட்டிலும் பேட்டை அதிகமாக பயன்படுத்துவதற்கு இந்த பயிற்சி முறை வழிவகுக்கும். அத்துடன் கிரீசுக்கு வெளியே வந்து சுழற்பந்தை அடித்து ஆடுவதற்கும் ஊக்குவிக்கும். அவர்களின் வித்தியாசமான பயிற்சியை கம்பீர் உன்னிப்பாக கவனித்தார்.






