என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இதை செய்யாவிட்டால்.. ரோகித் ஓய்வு பெற வேண்டும் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாக்
- ரோகித் தனது கடைசி 14 இன்னிங்சில் ஒழுங்காக விளையாடவில்லை.
- அனைத்து சிறந்த வீரர்களும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி நாள் இன்னும் மீதமுள்ளதால் ஆட்டம் டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ரன்கள் அடிக்காத இந்திய கேப்டன் ரோகித் சர்மா கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த தொடரில் ரோகித் இதுவரை 22 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ரோகித்தை விடவும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் போலாண்ட் அதிக ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாக்சிங் டே டெஸ்டின் 2 ஆவது இன்னிங்சில் ரன்கள் அடிக்க வில்லை என்றால் ரோகித்தை நான் ஓய்வு பெற சொல்லுவேன் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "நான் ரோகித்திற்கு நன்றி கூறுவேன். நீங்கள் ஒரு சிறந்த வீரராக இருந்தீர்கள். ஆனால் உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவில் கேப்டனாக பும்ராவைக் கொண்டு வரப் போகிறோம்.
ரோகித் விடைபெற்று செல்வது மிகவும் கடினமான வழியாக இருக்கும். அவர் தனது கடைசி 14 இன்னிங்சில் ஒழுங்காக விளையாடவில்லை. இது எல்லா வீரர்களுக்கும் நடக்கும். அனைத்து சிறந்த வீரர்களும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வருகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.






