என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அந்த போட்டியுடன் விளையாட விரும்பாமல் ஓய்வு பெற நினைத்தேன்- மனம் திறந்த ரோகித்
- இறுதிப் போட்டி தோல்வியால் அனைவரும் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர்.
- இனி விளையாட விரும்பாமல் ஓய்வு பெற நினைத்தேன்.
புதுடெல்லி:
இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. 3 வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாக பணியாற்றிய அவர் டெஸ்ட், 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார்.
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த உலக கோப்பையை கைப்பற்றிய பிறகு ரோகித் சர்மா 20 ஓவர் போட்டியில் இருந்து விடை பெற்றார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து பயணத்துக்கு முன்பு டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
மற்றொரு சீனியர் வீரரான விராட் கோலியும் இதே பாணியில் 20 ஓவர், டெஸ்ட்டில் விடை பெற்று இருந்தார். இருவரும் தற்போது ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்கள். 2027 உலக கோப்பையில் விளையாடுவதை இருவரும் இலக்காக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் 2023 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற பிறகு ஓய்வு பெற முடிவு செய்ததாக ரோகித் சர்மா புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
ரோகித் கூறியதாவது:-
2023 உலக கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு நான் முற்றிலும் மனமுடைந்து போனேன். இந்த விளையாட்டு என்னடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டதால் இனி விளையாட விரும்பாமல் ஓய்வு பெற நினைத்தேன். என்னிடம் எதுவும் மிச்சமில்லை என்று தோன்றியது. அதில் இருந்து மீள சிறிது காலம் ஆனது.
இறுதிப் போட்டி தோல்வியால் அனைவரும் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். என்ன நடந்தது என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் கடினமான நேரமாக இருந்தது. ஏனென்றால் அந்த உலக கோப்பைக்காக நான் 2 ,3 மாதங்களுக்கு முன்பு மட்டு மல்ல 2022-ல் கேப்டன் பதவியை ஏற்றதில் இருந்தே எல்லாவற்றையும் அர்ப்பணித்து இருந்தேன்,
20 ஓவர் உலககோப்பையாக இருந்தாலும் சரி, 2023 உலக கோப்பையாக இருந்தாலும் சரி, உலக கோப்பையை வெல்வது மட்டுமே எனது ஒரே இலக்காக இருந்தது. அது நடக்காத போது நான் முற்றிலும் நிலைகுலைந்து போனேன். எனது உடலில் எந்த சக்தியும் இல்லை. அதில் இருந்து மீண்டு பழைய நிலைக்குத் திரும்ப 2 மாதங்கள் ஆனது.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
2023 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அவரது தலைமையில் 2024-ல் 20 ஓவர் உலக கோப்பை கிடைத்தது. ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவர் அதில் மட்டும் தற்போது ஆடி வருகிறார்.






