என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ரஞ்சி கோப்பை அரையிறுதி: சூர்யகுமார், ஷிவம் துபே டக் அவுட்.. 7 விக்கெட்டுகளை இழந்த மும்பை
- பந்து வீச்சில் ஷிவம் துபே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 188 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
நாக்பூர்:
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்குகிறது. 32 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரில் லீக் மற்றும் காலிறுதி சுற்று ஆட்டங்களின் முடிவில் குஜராத், கேரளா, விதர்பா மற்றும் மும்பை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின.
இதில் நாக்பூரில் நடைபெற்று வரும் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் மும்பை - விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் மும்பை அணிக்காக இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே களமிறங்கினர். இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி ஆரம்பம் முதலே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.
துருவ் ஷோரே (74 ரன்கள்), டேனிஷ் மாலேவார் (79 ரன்கள்), கருண் நாயர் (45 ரன்கள்) ரத்தோட் (54), ஆகியோரின் கணிசமான பங்களிப்புடன் விதர்பா முதல் இன்னிங்சில் 383 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மும்பை தரப்பில் ஷிவம் துபே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணியில் ஆயுஷ் மத்ரே 9, சித்தேஷ் லாட் 35, ரகானே 18 என வெளியேறினார். இதனையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவும் ஷிவம் துபேவும் டக் அவுட்டில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.
இதனால் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 188 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. ஆகாஷ் ஆனந்த் 67 ரன்களுடனும் தனுஷ் கோட்யான் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.






