என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இந்திய மகளிர் அணியின் வெற்றியை கொண்டாடிய பாகிஸ்தான் ரசிகர் - வைரல் வீடியோ
- முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது.
- இந்திய தேசிய கீதத்தை பாகிஸ்தான் ரசிகர் பாடியது இந்தியர்களை நெகிழ வைத்தது.
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், ஒருநாள் மகளிர் உலகக் கோப்பையை இந்திய வீராங்கனைகள் வென்றதை, பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தனது குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், அர்ஷத் என்ற நபர் பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்சியை அணிந்தபடி இந்திய மகளிர் அணிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.
அதில், இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு அவர் எழுந்து நின்று இந்திய தேசிய கீதத்தைப் பாடியது இந்திய ரசிகர்களை உண்மையிலேயே நெகிழ வைத்தது.
அர்ஷத்தின் இந்த செயல், இருநாட்டு எல்லைகளை கடந்து இதயங்களை இணைக்கும் சக்தி விளையாட்டுக்கு உண்டு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.






