என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ரைசிங்ஸ்டார் ஆசிய கோப்பை: சூப்பர் ஓவரில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பாகிஸ்தான்
- ரைசிங்ஸ்டார் ஆசிய கோப்பையின் இறுதி ஆட்டம் தோகாவில் இன்று நடந்தது.
- சூப்பர் ஓவரில் வென்ற பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.
தோகா:
வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.
லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த வங்கதேசம், இலங்கை அணியும், பி பிரிவில் பாகிஸ்தான், இந்தியா அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் அரையிறுதியில் வங்கதேசம் சூப்பர் ஓவரில் இந்தியாவை வீழ்த்தியது. 2வது அரையிறுதியில் பாகிஸ்தான் இலங்கையை வீழ்த்தியது.
இந்நிலையில், ஆசிய கோப்பை இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 125 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய வங்கதேச அணி 125 ரன்கள் மட்டுமே அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் வங்கதேச அணி முதலில் பேட் செய்தது. முதல் பந்தில் ஒரு ரன் கிடைத்தது. 2வது பந்தில் விக்கெட் வீழ்ந்தது. 3வது பந்தில் 5 வைடுகள் கிடைத்தன. 4வது பந்தில் விக்கெட் வீழ்ந்தது.
இதையடுத்து, சூப்பர் ஓவரில் 7 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 4 பந்தில் 7 ரன் அடித்து சாம்பியன் பட்டம் வென்றது.






