என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இந்திய சுழற்பந்து வீரர்களில் முதலிடம்: சாஹல் சாதனையை குல்தீப் முறியடிப்பாரா?
- இந்திய அணி 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது.
- யுஸ்வேந்திர சாஹல் 80 ஆட்டத்தில் 96 விக்கெட் வீழ்த்தியுள்ளார்
அகமதாபாத்:
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. 20 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப்போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் நிறையும் தருவாயில் இருக்கிறது.
நடப்பு சாம்பியனான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 'சூப்பர் 8' சுற்றுக்கு தகுதி பெற்றது. அமெரிக்கா (29 ரன்), நமீபியா (93 ரன்), பாகிஸ்தான் (61 ரன்) ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது.
இந்திய அணி 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது. அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு இந்தப்போட்டி நடக்கிறது. நெதர்லாந்தையும் வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் ரன் குவிப்பில் இந்திய அணி புதிய சாதனை படைக்குமா? என்று ஆவலு டன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்தினால் குல்தீப் யாதவ் 20 ஓவரில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீரர் என்ற சாதனையை படைப்பார். யசுவேந்திர சாஹல் 80 ஆட்டத்தில் 96 விக்கெட் வீழ்த்தியுள்ளார். குல்தீப் யாதவ் 54 போட்டியில் 95 விக்கெட் கைப்பற்றியுள்ளார். உலகக் கோப்பை போட்டியில் குல்தீப் யாதவுக்கு முதல் 2 போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
பாகிஸ்தானுக்கு எதிராக இடம்பெற்று ஒரு விக்கெட் எடுத்தார். இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டால் அவர் யசுவேந்திரா சாஹலை முந்துவதற்கு வாய்ப்பு உள்ளது.
இந்திய வேகப்பந்து வீரர்களில் அர்ஷ்தீப் 121 விக்கெட்டுடன் முதல் இடத்திலும், பும்ரா 110 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், ஹர்திக் பாண்ட்யா 109 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். மற்ற சுழற்பந்து வீரர்களில் அக்ஷர் படேல் 92 விக்கெட்டும், ஓய்வு பெற்ற அஸ்வின் 72 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 65 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.






