என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    இலவச பாஸ் என்ற வதந்தி பரவியதால் 3 லட்சம் பேர் திரண்டதே விபத்துக்கு காரணம்
    X

    இலவச பாஸ் என்ற வதந்தி பரவியதால் 3 லட்சம் பேர் திரண்டதே விபத்துக்கு காரணம்

    • இந்த நெரிசலில் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
    • 9 பேர் மருத்துவமனையில் இறந்தனர்.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் சாம்பியன் கோப்பையை வென்றது. ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர் பெங்களூரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.

    இதையடுத்து, கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதானசவுதாவில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து காலை முதலே லட்சக்கணக்கான பேர் விதானசவுதா முன்பு குவியத் தொடங்கினர். கூட்டம் அதிகரித்து வந்த நிலையில் திடீரென மாலை 3 மணியளவில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பாராட்டு விழா சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து விதானசவுதா முன்பு குவிந்திருந்த லட்சக்கணக்கானோர் கிரிக்கெட் மைதானத்தை நோக்கி புறப்பட்டனர். இதேபோல் பெங்களூரு நகரின் நாலா திசைகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கிரிக்கெட் ஸ்டேடியத்தை நோக்கி படையெடுத்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க இலவச பாஸ் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என்ற வதந்தி பரவியது. இதையடுத்து லட்சக்கணக்கானோர் பாஸ் பதிவிறக்கம் செய்து ஸ்டேடியத்துக்கு திரண்டனர்.

    சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பார்வையாளர் கேலரியில் 35,000 இருக்கைகள் உள்ளன. இதில் 5 ஆயிரம் இருக்கைகள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும், வி.ஐ.பி.க்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 30 ஆயிரம் இருக்கைகள் மட்டுமே ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் விளையாட்டு மைதானத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 9 பேர் மருத்துவமனையில் இறந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறல் மற்றும் காயம் அடைந்து கதறினர்.

    மைதானத்தின் 3, 6, 7, 10, 12, 14, 21 ஆகிய வாயில்களில் தள்ளுமுள்ளு, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலின் போது பலர் மயங்கி விழுந்தனர். சிலருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தங்கள் சட்டைகளை கழற்றி காயமடைந்தவர்களை காப்பாற்ற விசிறி அடிக்க முயன்றனர். ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்ததால், காயமடைந்தவர்களை மீட்க முடியாமல் தவித்து வந்தனர்.

    கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், போலீசார் ஒலிபெருக்கிகள் மூலம் மைதானத்தை விட்டு வெளியேறுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். "நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உடனடியாக வீட்டிற்குச் செல்லுங்கள்." ஆம்புலன்ஸ்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். கப்பன் சாலையில் இருந்து மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் முதலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நேரத்தில், கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தப்பட்டது. இதனால் மக்கள் பயந்து ஓடினார்கள். இதில் ஒரு பலகை இடிந்து விழுந்தது. இதனால் மக்கள் வெவ்வேறு திசைகளில் ஓட தொடங்கியதால் விபத்து ஏற்பட்டது. கூட்ட நெரிசல் 1½ மணி நேரம் நடந்தது. மேலும் 2 மெட்ரோ ரெயில் நிலையங்களும் மூடப்பட்டது. இதுவும் கூட்ட நெரிசலுக்கு ஒரு காரணமாகும்.

    கூட்ட நெரிசல் காரணமாக, காயமடைந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் சிவாஜிநகரில் உள்ள வைதேஹி மருத்துவமனை, பவுரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 35ஆயிரம் பேர் அமர வேண்டிய இடத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதாலும், இலவச பாஸ் வதந்தி, போதிய போலீஸ் பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாததே இந்த சம்பவத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×