என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

சேப்பாக்கம் ஐபிஎல் போட்டி: ஐதராபாத்துக்கு 155 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சிஎஸ்கே
- பிரேவிஸ் 25 பந்தில் 42 ரன்கள் விளாசினார்.
- எம்.எஸ். தோனி 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஐ.பி.எல். தொடரின் 43ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி சென்னை முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியில் டெவாய்ட் பிரேவிஸ் அறிமுகம் ஆனார். தீபக் ஹூடா, சாம் கர்ரன் அணியில் சேர்க்கப்பட்டனர்.
ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை முகமது சமி வீசினார். முதல் பந்திலேயே ரஷீத் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து மாத்ரே உடன் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார். ஒருபக்கம் கர்ரன் அமைதியாக நிற்க மறுபக்கம் மாத்ரே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சாம் கர்ரன் 10 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3ஆவது விக்கெட்டுக்கு மாத்ரே உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். 6ஆவது ஓவர் கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தில் மாத்ரே ஆட்டமிழந்தார். அவர் 19 பந்தில் 30 ரன்கள் விளாசினார். அடுத்து பிரேவிஸ் களம் இறங்கினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 17 பந்தில் 21 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் கிடைக்காமல் சிஎஸ்கே திணறியது.
12ஆவது ஓவரை கமிந்து மெண்டிஸ் வீசினார். இந்த ஓவரில் பிரேவிஸ் 3 சிக்ஸ் விளாசினார். ஹர்ஷல் படேல் வீசிய அடுத்த ஓவரிலும் ஒரு கிச்ஸ் அடித்தார். அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்க முயற்சிக்க பவுண்டரி லைனில் கமிந்து மெண்டிஸ் அற்புதமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். பிரேவிஸ் 25 பந்தில் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 12.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களாக இருந்தது. அடுத்து துபே 12 ரன்னிலும், எம்.எஸ். தோனி 6 ரன்னிலும் ஆட்டமிழந்தார். தோனி ஆட்டமிழக்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.
இறுதியாக 19.5 ஓவரில் 154 ரன்னில் சிஎஸ்கே ஆல்அவட் ஆனது. தீபக் ஹூடா கடைசி விக்கெட்டாக 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.






