என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்
    X

    தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்

    • வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்குகிறது.
    • இந்த டெஸ்டில் தோற்றாலோ அல்லது டிராவில் முடிந்தாலோ இந்திய அணி தொடரை இழக்கும்.

    கவுகாத்தி:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 124 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன் னிலையில் உள்ளது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்குகிறது. இப்போட்டி நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

    முதல் டெஸ்டில் கழுத்து வலியால் பாதியில் வெளியேறிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    முதல் டெஸ்டில் சந்தித்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்குகிறது. வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.

    இந்த டெஸ்டில் தோற்றாலோ அல்லது டிராவில் முடிந்தாலோ இந்திய அணி தொடரை இழக்கும். எனவே இந்தியா வெற்றிக்காக கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த போட்டியில் கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக பாதியில் வெளியேறியது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் இடம் பெறலாம் என்று தெரிகிறது.

    பேட்டிங்கில் கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல் ஆகியோரும் ஆல்-ரவுண்டர் வரிசையில் ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரும் உள்ளனர்.

    பந்துவீச்சில் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் உள்ளனர். எத்தனை சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவது என்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும். முதல் டெஸ்டில் பேட்டிங்கில் சொதப்பியதால் அதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

    பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி கடந்த போட்டியில் வெற்றி பெற்றதால் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அந்த அணியில் மார்க்ராம், டோனி டி ஜோர்ஜி, ரிக்கல்டன், மார்கோ ஜான்சன், முல்டர்,ஸ்டெப்ஸ், ஹார்மர், கேசவ் மகராஜ் ஆகியோர் உள்ளனர்.

    நாளை தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா அணி உள்ளது. டிரா செய்தாலே தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றி விடும். எனவே இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் வேட்கையில் அந்த அணி உள்ளது. இதை தடுக்க இந்தியா முயற்சிக்கும். எனவே கடைசி டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×