என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஐசிசி தொடரின் இறுதிப்போட்டி: 6-வது முறையாக தொடரும் நியூசிலாந்தின் சோகக் கதை
- இதுவரை 8 முறை ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டிகளுக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.
- ஐசிசி தொடர்களில் அதிகமுறை அரையிறுதிக்கு முன்னேறிய அணி நியூசிலாந்து.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அதிரடியாக விளையாடி 255 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன்மூலம் நியூசிலாந்தின் உலகக்கோப்பை கனவு மீண்டும் ஒருமுறை தகர்ந்துள்ளது. அதன்படி கடந்த 11 ஆண்டுகளில் ஐசிசி நடத்தும் முக்கிய கிரிக்கெட் தொடர்களின் இறுதிப் போட்டிகளில் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவுவது இது 6-வது முறையாகும்.
இதுவரை 8 முறை ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டிகளுக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. அதில் 2 முறை மட்டுமே (2000 சாம்பியன்ஸ் ட்ராபி, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்) வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 6 முறை தோல்வியைச் சந்தித்துள்ளது.
2009 சாம்பியன்ஸ் ட்ராபி: ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
2015 ஒருநாள் உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
2019 ஒருநாள் உலகக்கோப்பை: இங்கிலாந்துடன் நடைபெற்ற போட்டியில் பவுண்டரி கணக்கு அடிப்படையில் தோல்வி.
2021 டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
2025 சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
2026 டி20 உலகக்கோப்பை: நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவிடம் 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.
இருப்பினும், ஐசிசி தொடர்களில் அதிகமுறை (14 முறை) அரையிறுதிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை நியூசிலாந்து இப்போதும் தக்கவைத்துள்ளது.






