என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    3ஆவது டெஸ்டில் விளையாடுவேனா என்பது தெரியாது: எட்ஜ்பாஸ்டனில் அசத்திய ஆகாஷ் தீப் சொல்கிறார்..!
    X

    3ஆவது டெஸ்டில் விளையாடுவேனா என்பது தெரியாது: எட்ஜ்பாஸ்டனில் அசத்திய ஆகாஷ் தீப் சொல்கிறார்..!

    • பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டதால் ஆகாஷ் தீப்பிற்கு 2ஆவது டெஸ்டில் வாய்ப்பு.
    • முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

    6ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ப்ரூக்- ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ப்ரூக் 158 ரன்களும், ஜெமி ஸ்மித் 184 (அவட்இல்லை) ரன்களும் விளாசினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர். இறுதியாக 2ஆவது புதிய பந்து எடுக்கப்பட்டது. ஆகாஷ் தீப்பின் இன்ஸ்விங் பந்தில் ப்ரூக் ஸ்டம்பை பறிகொடுத்தார். இந்த ஜோடி 6ஆவது விக்கெட்டுக்கு 60.4 ஓவரில் 303 ரன்கள் குவித்தது.

    இந்த ஜோடியை பிரித்ததும் முகமது சிராஜ் அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது. முகமது சிராஜ் 6 விக்கெட் வீழ்த்த, ஆகாஷ் தீப் டக்கெட், ஒல்லி போப், ஹாரி ப்ரூக், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரை வீழ்த்தினார்.

    20 ஓவரில் 88 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். மேலும், முதல் ஓவரை தொடங்கியது இவர்தான். இந்த நிலையில் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் 3ஆவது டெஸ்டில் இடம் பெறுவேனா? என்பது தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக ஆகாஷ் தீப் கூறியதாவது:-

    இந்த டெஸ்ட் போட்டியில் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறுவது எங்களுக்கு முக்கியமானது. ஆகவே, 3ஆவது டெஸ்ட் போட்டி பற்றி நான் நினைக்கவில்லை. என்னுடைய முழு எனர்ஜியையும் இந்த 2 நாட்களில் வெளிப்படுத்த வேண்டும் என நம்புகிறேன். அதன் பிறகு 3ஆவது டெஸ்ட் பற்றி பரிசீலிப்பேன். நான் விளையாட வேண்டுமா? வேண்டாமா? என்பதை அணி முடிவு செய்யும்.

    நான் விளையாடுவேனா என்பது எனக்குத் தெரியாது. அணி முடிவை எடுக்கும். போட்டிக்கு ஒருநாள் முன்னதாக ஆடும் லெவனில் இடம் உள்ளதா? என்பது தெரியும்.

    இவ்வாறு ஆகாஷ் தீப் தெரிவித்தார்.

    முதல் டெஸ்டில் விளையாடிய பும்ரா 2ஆவது டெஸ்டில் விளையாடவில்லை. இதனால் ஆகாஷ் தீப்பிற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். லார்ட்ஸ் டெஸ்டில் பும்ரா நிச்சயமாக விளையாடுவார். இதனால் யார் நீக்கப்படுவார்கள் என்பது தெரியது. ஒருவேளை பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் இடையே கடும் போட்டி ஏற்படலாம்.

    Next Story
    ×