என் மலர்
கிரிக்கெட் (Cricket)

100 பந்துகளை சந்தித்தும் சிக்சர் அடிக்க முடியல- ரோகித்தை திணறவிட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்
- ரோகித் சர்மா வேகப்பந்து வீச்சில் 232 சிக்சரும், சுழற்பந்து வீச்சில் 120 சிக்சரும் தெறிக்க விட்டுள்ளார்.
- ரோகித் சர்மா 100-க்கும் அதிகமான பந்துகளை சந்தித்து சிக்சர் அடிக்க முடியாத ஒரே பவுலராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் உள்ளார்.
ராஞ்சியில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 3 சிக்சர் பறக்க விட்டார். இதையும் சேர்த்து சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அவரது சிக்சர் எண்ணிக்கை 352 ஆக உயர்ந்தது.
இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிக சிக்சர் விரட்டிய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். கடந்த 15 ஆண்டுகளாக இச்சாதனை பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி (351 சிக்சர்) வசம் இருந்தது. அவரை ரோகித் சர்மா நேற்று முந்தினார்.
38 வயதான ரோகித் சர்மா இதுவரை 277 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 33 சதங்கள் உள்பட 11,427 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 352 சிக்சரும், 1,071 பவுண்டரிகளும் அடங்கும்.
•ரோகித் சர்மா அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 93 சிக்சர் விளாசியுள்ளார். குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர் அடித்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர் தான்.
• ஓராண்டில் அதிக சிக்சர் எடுத்தவர் என்ற சிறப்பும் அவரிடமே (2023-ம் ஆண்டில் 67 சிக்சர்) உள்ளது.
• உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரராகவும் (54 சிக்சர்) வலம் வருகிறார்.
•இதுவரை 150 பவுலர்களின் பந்தில் சிக்சர் அடித்திருக்கிறார். அவர் 100-க்கும் அதிகமான பந்துகளை சந்தித்து சிக்சர் அடிக்க முடியாத ஒரே பவுலர் வெஸ்ட் இண்டீசின் மர்லன் சாமுவேல்ஸ் ஆவார். இனியும் அடிக்கமுடியாது. ஏனென்றால் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.
வேகப்பந்து வீச்சில் 232 சிக்சரும், சுழற்பந்து வீச்சில் 120 சிக்சரும் தெறிக்க விட்டுள்ளார்.
•ஒரு நாள் போட்டியில் 1971-ம் ஆண்டு முதல் முறையாக சிக்சர் அடிக்கப்பட்டது. ரோகித் சர்மாவுக்கு முன்பாக அதிக சிக்சர் அடித்த சாதனை மொத்தம் 18 வீரர்களிடம் மாறியிருக்கிறது. கடைசியாக அப்ரிடியிடம் இச்சாதனை 2010-ம் ஆண்டில் சென்றது. அவர் சிக்சர் மன்னர் அரியணையில் 5,641 நாட்கள் இருந்தார்.
இனி ரோகித் சர்மா 'சிக்சர் கிங்'காக தொடருவார். இப்போது விளையாடும் வீரர்களில் ரோகித் சர்மாவை தவிர்த்து பார்த்தால், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் (182 சிக்சர்), இந்தியாவின் விராட் கோலி (159 சிக்சர்) மட்டுமே 150-க்கும் அதிகமாக சிக்சர் அடித்துள்ளனர். எனவே ரோகித் சர்மாவின் சாதனையை தகர்ப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.






