என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏன் நிராகரித்தேன்? - பும்ரா விளக்கம்
- இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும் துணை கேப்டனாக ரிஷப் பண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- கேப்டன் பதவியை விட கிரிக்கெட்டை தான் நான் அதிகம் நேசிக்கிறேன்.
இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும் துணை கேப்டனாக ரிஷப் பண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பும்ராவிற்கு டெஸ்ட் கேப்டன் பதவி வழங்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சுப்மன் கில்லுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் நியமிக்க பி.சி.சி.ஐ. அணுகியதாகவும் ஆனால் தான் அதை வேண்டாம் என்று நிராகரித்து விட்டதாக பும்ரா தெரிவித்துள்ளார்.
ஸ்கை ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக் உடனான உரையாடலின் போது, பும்ரா இவ்வாறு தெரிவித்தார்.
அந்த பேட்டியில் பேசிய அவர், "ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்த தன்னை கேப்டன் பதவியில் நியமிக்க பி.சி.சி.ஐ. அணுகியது. இருப்பினும் பணிச்சுமை மற்றும் அடிக்கடி காயம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு அந்த வாய்ப்பை தான் நிராகரித்தேன்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முழுவதும் என்னால் விளையாட முடியுமா என்ற சந்தேகம் இருக்கும்போது, நான் எப்படி கேப்டன்சி செய்ய முடியும்? 3 போட்டிகளுக்கு ஒருவர் கேப்டனாகவும் 2 போட்டிகளுக்கு மற்றொருவர் கேப்டனாகவும் இருப்பது சரியல்ல. அணிக்கு எது முக்கியமோ அதைதான் நான் செய்தேன்
இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்துவது மிகப்பெரிய மரியாதை. ஆனால் கேப்டன் பதவியை விட கிரிக்கெட்டை தான் நான் அதிகம் நேசிக்கிறேன். அதனால் ஒரு வீரராக இந்திய அணிக்கும் அதிக பங்களிப்பை வழங்க விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.






