என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பயிற்சியாளர் பதவியில் இருந்து கம்பீர் நீக்கம்? கிரிக்கெட் வாரியம் விளக்கம்
- டெஸ்ட் போட்டிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்ததாக தகவல் வெளியானது.
- இதற்காக முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமணனை பி.சி.சி.ஐ. அணுகியதாகவும் கூறப்பட்டது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் கடந்த ஆண்டு ஜூலை 10-ந்தேதி நியமிக்கப்பட்டார். 2027-ல் நடைபெற உள்ள ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பை வரை அவரது பதவிக்காலம் இருக்கிறது.
கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது.
ஆனால் டெஸ்டில் இந்திய அணி பெரிய அளவில் வெற்றிகளை பெறவில்லை. சொந்த மண்ணில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவிடம் முழுமையாக டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் அவர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
இதனால் டெஸ்ட் போட்டிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க பி.சி.சி.ஐ. (இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம்) முடிவு செய்ததாக தகவல் வெளியானது. இதற்காக முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமணனை பி.சி.சி.ஐ. அணுகியதாகவும் கூறப்பட்டது. இதை கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே நிராகரித்து இருந்தது.
இந்த நிலையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து கம்பீர் நீக்கம் இல்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:-
பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குறித்து பரவி வரும் யூகங்கள் குறித்து நான் மிக தெளிவாக கூற விரும்புகிறேன். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீரை நீக்கவோ அல்லது புதிய பயிற்சியாளரை நியமிக்கவோ எந்த திட்டமும் இல்லை என்பதை பி.சி.சி.ஐ செயலாளர் (தேவஜித் சைகியா) மிகத் தெளிவாக தெரிவித்துவிட்டார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






