என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: அரைஇறுதி ஆட்டத்துக்கு தீவிர பாதுகாப்பு
    X

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: அரைஇறுதி ஆட்டத்துக்கு தீவிர பாதுகாப்பு

    • ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு, மோட்டார் சைக்கிளில் வந்தவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
    • ஆஸ்திரேலிய அணி அடுத்து இந்தியாவுடன் அரை இறுதியில் வருகிற 30-ந் தேதி விளையாடுகிறது.

    மும்பை:

    13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இலங்கையில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து விட்டன.

    நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகியஅணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளன.

    கடந்த 25-ந்தேதி ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இந்தூரில் விளையாடின.

    இந்தூருக்கு சென்ற ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு, மோட்டார் சைக்கிளில் வந்தவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

    ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர் கடந்த 23-ந்தேதி (வியாழக்கிழமை)ரேடிசன் புளூ ஓட்டலில் இருந்து ஜாகிங் சென்று கொண்டிருந்தனர். அப்போது தேனீர் விடுதிக்குச் செல்ல கஜ்ரானா சாலையில் நடந்து சென்ற போது, தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அவர்களிடம் தவறான செயலில் ஈடுபட்டு பாலியல் அத்துமீறல் செய்து உள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

    ஆஸ்திரேலிய அணி அடுத்து இந்தியாவுடன் அரை இறுதியில் வருகிற 30-ந் தேதி விளையாடுகிறது. நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டேல் ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர் மானபங்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து நவிமும்பையில் தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

    வீராங்கனைகள் தங்கும் ஓட்டல், அவர்கள் செல்லும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டேடியத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் செல்லும் இடங்களுக்கு போலீசார் பாதுகாப்பை வழங்கி வருகிறார்கள்.

    ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருப்பதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×