என் மலர்
கிரிக்கெட் (Cricket)

AUSvIND.. 3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: பிரிஸ்பேன் மைதானத்தின் வரலாறு
- பிரிஸ்பேனில் வெற்றியை ருசித்த ஒரே ஆசிய அணி என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு.
- இந்த மைதானத்தில் இந்திய அணி 1947-ம் ஆண்டில் 58 ரன்னில் சுருண்டது குறைந்தபட்சமாகும்.
பிரிஸ்பேனில் 1931-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் நடந்து வருகிறது. இந்த மைதானம் ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் ராசியானது. இங்கு 66 டெஸ்டுகளில் ஆடியுள்ள ஆஸ்திரேலியா 42-ல் வெற்றியும், 10-ல் தோல்வியும், 13-ல் 'டிரா'வும் கண்டுள்ளது. ஒரு டெஸ்ட் சமனில் (டை) முடிந்தது.
இந்திய அணி இந்த மைதானத்தில் 7 டெஸ்டுகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், 5-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. மற்றொரு போட்டி 'டிரா' ஆனது. இந்த ஒரே வெற்றி 2021-ம் ஆண்டு ஜனவரியில் கிடைத்தது. அந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 328 ரன் இலக்கை இந்திய அணி சுப்மன் கில் (91 ரன்), ரிஷப் பண்ட் (89 ரன்) ஆகியோரின் அதிரடியால் எட்டிப்பிடித்து வரலாறு படைத்தது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 300 ரன்களுக்கு மேலான இலக்கை விரட்டிப்பிடித்தது இதுவே முறையாகும்.
அத்துடன் 32 ஆண்டுக்கு பிறகு இங்கு ஆஸ்திரேலியா சந்தித்த முதல் தோல்வியாகவும் அமைந்தது. இந்த நாள் வரைக்கும் பிரிஸ்பேனில் வெற்றியை ருசித்த ஒரே ஆசிய அணி என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு. இதே போல் இந்தியா மீண்டும் சாதிக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
அதே சமயம் இங்கு கடந்த ஜனவரி மாதம் நடந்த டெஸ்டில் வெஸ்ட் இண்டீசிடம் 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலியா மறுபடியும் எழுச்சி பெற வரிந்து கட்டும் என்பதால் களத்தில் அனல் பறக்கும்.
இங்கு ஆஸ்திரேலிய அணி 4 முறை 600 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. 1946-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 645 ரன்கள் சேர்த்தது ஒரு அணியின் அதிகபட்சமாகும். இந்திய அணி 1947-ம் ஆண்டில் 58 ரன்னில் சுருண்டது குறைந்தபட்சமாகும்.
இதுவரை 66 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ள பிரிஸ்பேனில் 118 சதங்களும், 303 அரைசதங்களும் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் கிரேக் சேப்பல், மைக்கேல் கிளார்க் தலா 5 சதங்கள் நொறுக்கியுள்ளனர். இந்திய வீரர்களில் சவுரவ் கங்குலி, முரளிவிஜய், சுனில் கவாஸ்கர், ஜெய்சிம்ஹா செஞ்சுரி அடித்திருக்கிறார்கள்.
அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ேஷன் வார்னே (68 விக்கெட், 11 டெஸ்ட்) முதலிடம் வகிக்கிறார். தற்போது ஆடும் வீரர்களில் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் (51 விக்கெட்), மிட்செல் ஸ்டார்க் (47 விக்கெட்) கணிசமாக விக்கெட் எடுத்துள்ளனர்.
பிரிஸ்பேன் ஆடுகளத்தில் பந்து வேகத்துடன் நன்கு பவுன்சும் இருக்கும். போட்டி நடக்கும் 5 நாட்களும் மழை குறுக்கிட வாய்ப்புள்ளது. குறிப்பாக நாளைய தினம் மழை பெய்வதற்கு 50 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே மேகமூட்டமான சீதோஷ்ண நிலை காணப்பட்டால், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்.






