என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி: சச்சின் இரங்கல்
- ஆர்.சி.பி. அணி வெற்றி விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள்.
- பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது மிகவும் துயரமானது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது. ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை.
இதனால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். இதையடுத்து, கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதானசவுதாவிலும் (சட்டசபை வளாகம்), பெங்களூரு அணி நிர்வாகம் சார்பில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திலும் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையொட்டி சின்னசாமி மைதானத்திற்கு ரசிகர்கள் அதிக அளவில் திரண்டு வந்தனர். சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தார்கள். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் உண்டானது. இந்த நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இந்திய முன்னாள் வீரரான சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
அதில், "பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது மிகவும் துயரமானது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்காகவும் என் இதயம் இரங்குகிறது. அனைவருக்கும் அமைதியும் பலமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.






