என் மலர்
விளையாட்டு

ஜெமிமா குறித்து அன்றே கணித்த இங்கிலாந்து முன்னாள் வீரர்
- 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஜெமிமா ரோட்ரிக்ஸை பலரும் பாராட்டி வருகின்றனர்.
- ஜெமிமா ரோட்ரிக்ஸ் குறித்த பழைய எக்ஸ் தள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நவிமும்பையில் நடந்த பரபரப்பான அரைஇறுதியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை விரட்டியடித்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 339 ரன் இலக்கை ஜெமிமா ரோட்ரிக்ஸ் (127 ரன், 14 பவுண்டரி), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (89 ரன்) ஆகியோரது அசாத்தியமான பேட்டிங்கால் இந்திய அணி 48.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இதன் மூலம் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை விரட்டிப்பிடித்த அணி என்ற புதிய சாதனையை இந்தியா படைத்தது.
கடைசி வரை களத்தில் நின்று வெற்றிக்கு அழைத்து சென்ற ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளப்பூரிப்பில் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் நீண்ட நேரம் தேம்பி தேம்பி அழுதார்.
இதையடுத்து அவர் பேசுகையில், முதலில் நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எல்லாம் கனவு போல் இருக்கிறது. இந்தியாவை வெற்றி பெறச் செய்வதே எனது எண்ணமாக இருந்தது. கடந்த ஆண்டு உலக கோப்பையில் இருந்து நீக்கப்பட்டேன். அந்த வலி இன்னும் மனதில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அழுதிருக்கிறேன். நிறைய கடினமான நாட்களை கடந்து வந்திருக்கிறேன். கடவுள் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் கொடுப்பார். தன்மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி என்று கூறி நெகிழ்ந்தார்.
127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஜெமிமா ரோட்ரிக்ஸை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் குறித்த பழைய எக்ஸ் தள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
2018ம் ஆண்டு ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் செய்த வலைப்பயிற்சிக்கு பின், 'ஜெமிமா ரோட்ரிக்ஸ் என்ற பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இன்று அவள் சில தோல்விகளைச் சந்தித்தார். ஆனால் ஜெமிமா இந்திய அணியின் நட்சத்திர வீரராக உருவெடுப்பார்' என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் பதிவிட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.






