என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பும்ரா
    X
    பும்ரா

    இலங்கை அணிக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட்: அணுகுமுறையில் மாற்றம் அவசியம்- பும்ரா

    ஆடுகளத்தன்மையை முழுமையாக ஆராய்ந்து அதற்கு ஏற்ப ஆடும் லெவன் அணியை முடிவு செய்வோம் என இந்திய அணியின் துணை கேப்டன் பும்ரா தெர்வித்துள்ளார்.
    இந்திய அணியின் துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பிங்க் பந்து டெஸ்ட் கிரிக்கெட் (பகல்-இரவு) போட்டியில் எத்தகைய அணுகுமுறை தேவை என்பதில் இன்னும் நாங்கள் கற்றுக்கொண்டு தான் இருக்கிறோம். தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் என்ற முறையில் முடிந்த வரை சூழலுக்கு தக்கபடி நம்மை சீக்கிரம் தகவமைத்து கொள்ள வேண்டியது முக்கியமாகும். 

    பீல்டிங்கின் போது பிங்க் பந்து வித்தியாசமாக தோன்றும். நீங்கள் நினைத்ததை விட பந்து வேகமாக கைக்கு வந்து விடும். வழக்கமான டெஸ்ட் போட்டியில் காலையில் பந்து அதிகமாக ‘ஸ்விங்’ ஆகும். ஆனால் பகல்-இரவு டெஸ்ட் பிற்பகலில் தொடங்குவதால் அந்த சமயத்தில் பந்து பெரிய அளவில் ‘ஸ்விங்’ ஆகாது. ஆனால் மாலைப்பொழுதில் பந்தை நன்கு ‘ஸ்விங்’ செய்ய முடியும். இது போன்ற விஷயங்கள் குறித்து நாங்கள் ஆலோசித்து இருக்கிறோம். 

    நாங்கள் அதிகமான பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை. இதுவரை எதிர்கொண்ட 3 போட்டிகளையும் வெவ்வேறு விதமான சீதோஷ்ண நிலையில் விளையாடி இருக்கிறோம். எனவே இத்தகைய போட்டிக்கு, இந்த மாதிரி தான் நம்மை மாற்றிக்கொண்டு தயாராக வேண்டும் என்று குறிப்பிட்ட எந்த அளவுகோலும் வைக்க முடியாது. 

    இதுவரை கிடைத்துள்ள அனுபவங்களை பகிர்ந்து அதற்கு ஏற்ப திட்டங்களை வகுக்க முயற்சிக்கிறோம். ஆடுகளத்தன்மையை முழுமையாக ஆராய்ந்து அதற்கு ஏற்ப ஆடும் லெவன் அணியை முடிவு செய்வோம்.

    இவ்வாறு பும்ரா கூறினார்.

    Next Story
    ×