என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஷ்ரேயாஸ் அய்யர் - சம்சன் - ஜடேஜா
    X
    ஷ்ரேயாஸ் அய்யர் - சம்சன் - ஜடேஜா

    மிடில் ஆர்டர் வரிசை மெய்சிலிர்க்க வைக்கிறது- பேட்ஸ்மேன்களுக்கு ரோகித்சர்மா பாராட்டு

    தொடக்க ஜோடி எளிதில் ஆட்டம் இழந்த பிறகு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
    தர்மசாலா:

    இலங்கைக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று 20 ஓவர் தொடரை கைப்பற்றியது.

    தர்மசாலாவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன் குவித்தது. இதனால் இந்தியாவுக்கு 184 ரன் இலக்காக இருந்தது.

    தொடக்க வீரர் நிஷான்கா 53 பந்தில் 75 ரன்னும் (11 பவுண்டரி), கேப்டன் தசுன் ‌ஷனகா 19 பந்தில் 47 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்), குணதிலகா 29 பந்தில் 38 ரன்னும் (4 பவுண் டரி, 2 சிக்சர் ) எடுத்தனர்.

    புவனேஸ்வர் குமார், பும்ரா, ஹர்சல் படேல், யசுவேந்திர சாஹல் , ஜடேஜா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 17 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 17.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஸ்ரேயாஸ் அய்யர் 44 பந்தில் 74 ரன்னும் (6 பவுண்டரி, 4 சிக்சர்), ஜடேஜா 18 பந்தில் 45 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர் ), சஞ்சு சாம்சன் 25 பந்தில் 39 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 62 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    இந்த வெற்றிக்காக பேட்ஸ்மேன்களை கேப்டன் ரோகித் சர்மா பாராட்டி உள்ளார். மிடில் ஆர்டர் வரிசை மெய்சிலிர்க்க வைத்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ரோகித் சர்மா கூறியதாவது:-

    ரோகித் சர்மா

    தொடக்க ஜோடி எளிதில் ஆட்டம் இழந்த பிறகு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் பொறுப்பை ஏற்று ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து கொடுத்தது என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

    அவர்களது பணி பாராட்டும் வகையில் இருந்தது. ஜடேஜாவும், ஸ்ரேயாஸ் அய்யரும் அபாரமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார்கள்.

    கடைசி 5 ஓவர்களில் பந்து வீச்சாளர்கள் ரன்களை அதிகமாக விட்டு கொடுத்து விட்டனர். இதற்காக நான் அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ள மாட்டேன்.ஏனென்றால் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தது.

    முதல் 15 ஓவர்களில் பந்துவீச்சு நன்றாக இருந்தது. கடைசியில்தான் ரன் போனது. ஆட்டத்தில் இதுமாதிரியும் நடக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்வி குறித்து இலங்கை கேப்டன் தசுன் ‌ஷனகா கூறும்போது, எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் பவர்பிளே ஓவர்களில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் செயல்பாடு சரியாக இல்லை. பவர் பிளேயில் இன்னொரு விக்கெட் கிடைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றார்.

    இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி தர்மசாலாவில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்த ஆட்டத்திலும் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் இலங்கை அணி ஆறுதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    Next Story
    ×