என் மலர்
செய்திகள்

கொல்கத்தாவுடன் இன்று மோதல் - ‘ஹாட்ரிக்’ வெற்றி ஆர்வத்தில் பெங்களூர் அணி
சென்னை:
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
10-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெங்களூர் அணி தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 2 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் ஐதராபாத்தை 6 ரன்னிலும் தோற்கடித்தது.
இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் பெங்களூர் அணி உள்ளது.
கொல்கத்தா அணி தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத்தை விழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் மும்பையிடம் 10 ரன்னில் தோற்றது. அந்த அணி பெங்களூரை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.
இரு அணிகளும் இதுவரை மோதிய ஆட்டங்களில் கொல்கத்தா 14-ல் பெங்களூர் 12-ல் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ்-லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் தோற்றுள்ளன. இதனால் 2-வது வெற்றியை பெறப்போவது டெல்லியா? பஞ்சாப்பா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.