search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஐபிஎல் 20 ஓவர் போட்டி காலவரையின்றி தள்ளிவைப்பு - கிரிக்கெட் வாரியம் தகவல்

    ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால் ஐபிஎல் 20 ஓவர் போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ,பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.அதில் இருந்து வருடம் தோறும் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டுக்கான 13வது ஐ.பி.எல் போட்டியை கடந்த மாதம் 29-ந் தேதி முதல் மே மாதம் 24-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

    கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டி வருகிற 15-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஊரடங்கு முடிந்த பிறகு எந்த தேதியில் நடத்தலாம் என்றும், குறுகிய காலத்தில் நடத்தலாமா? என்றும் கிரிக்கெட் வாரியம் யோசனையில் இருந்தது. இந்த நிலையில் ஊரடங்கு மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதால் ஐ.பி.எல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது.

    இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது;-

    பஞ்சாப், மராட்டியம், கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்து உள்ளன. ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக ஐ.பி.எல். போட்டியை வழக்கமாக நடத்தும் காலத்தில் நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

    ஆனால் நிச்சயமாக ஐ.பி.எல் போட்டியை ரத்து செய்ய மாட்டோம். இந்தப் போட்டி காலவரையின்றி தள்ளி வைக்கப்படுகிறது.

    ஐ.பி.எல். போட்டியை ரத்து செய்ய முடியாது. ஏனென்றால் எங்களுக்கு ரூ.3000 கோடி இழப்பு ஏற்படும். இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு கிரிக்கெட் வாரியம் தனது பங்கு தாரர்களுடன் இந்த வி‌ஷயத்தில் தீர்வு காணும்.

    எந்த காலக்கட்டத்தில் இந்த போட்டியை நடத்தலாம் என்பதில் கிரிக்கெட் வாரியத்திற்கு சவால் இருக் கலாம். இயல்புநிலை திரும்பிய பிறகுதான் இதுகுறித்து விவாதிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐ.பி.எல் போட்டியை நடத்துவதற்கு கிரிக்கெட் வாரியம் 2 யோசனைகளை முன்வைத்துள்ளது.

    20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு செப்டம்பர் முதல் அக்டோபர் தொடக்கம் வரை ஐ.பி.எல்.லை நடத்தலாம். ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டால் அந்த காலகட்டத்தில் நடத்தலாம் என்ற விருப்பமும் இருக்கிறது.

    Next Story
    ×