search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என் ஸ்ரீனிவாசன், எம்எஸ் டோனி
    X
    என் ஸ்ரீனிவாசன், எம்எஸ் டோனி

    எம்எஸ் டோனி ஐபிஎல் 2021 சீசனிலும் சென்னைக்காக விளையாடுவார்: என் ஸ்ரீனிவாசன் திட்டவட்டம்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2021 சீசனில் எம்எஸ் டோனியை தக்கவைத்துக் கொள்ளும் என என் ஸ்ரீனிவாசன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி கடந்த ஆறு மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் பிசிசிஐ-யின் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

    2020 ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடக்கும்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ரிலீஸ் செய்து ஏலத்தில் எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. சுமார் 15 கோடி ரூபாய் செலவழிக்க தேவையில்லை என்பதால் டோனியே இதை வலியுத்தியதாக கூறப்பட்டது.

    ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை தக்கவைத்துக் கொண்டது. 2020 ஐபிஎல் தொடரில் விளையாடினாலும், 2021 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில் எம்எஸ் டோனி இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவாரோ? அல்லது மாட்டாரோ? என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. 2021 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் என் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து என் ஸ்ரீனிவாசன் கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி எப்போது ஓய்வு பெறுவார், இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவார்? என்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர் விளையாடுவார். அதற்கு என்னால் உத்தரவாதம் கொடுக்க முடியும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த வருடம் விளைாடுவார். அடுத்த வருடம் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஏலத்தில் பங்கேற்பார். ஏலத்தின்போது அவரை தக்கவைப்போம். அதனால் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எவருக்கும் வேண்டாம்’’ என்றார்.

    எம்எஸ் டோனி ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×