search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி- முகமது ஷமி.
    X
    விராட் கோலி- முகமது ஷமி.

    ரோகித்-ராகுல் ரன் குவிப்பால் வெற்றி கிடைத்தது: வீராட்கோலி பேட்டி

    ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ரன் குவிப்பால் வெற்றி கிடைத்துள்ளது என்று இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியுள்ளார்.

    விசாகப்பட்டினம்:

    விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 107 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஜோடியான ரோகித்சர்மா (159 ரன்), லோகேஷ் ராகுல் (102 ரன்) சதம் அடித்தனர். அவர்கள் முதல் விக்கெட்டுக்கு 227 ரன் எடுத்தனர். கேப்டன் கோலி டக்-அவுட் ஆனார். அதன் பின் ஸ்ரேயாஸ் அய்யர் (53 ரன் 32 பந்து), ரி‌ஷப்பண்ட் (39 ரன் 16 பந்து) ஆகியோரின் அதிரடியில் இந்திய அணி 50 ஓவர் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன் குவித்தது.

    கடினமான இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவருக்கு 280 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணி தொடக்கத்தில் ரன்கள் சேர்த்தது. ஆனால் முகமது சமி, குல்தீப் யாதவ் ஆகியோரின் அபார பந்து வீச்சால் விக்கெட்டுகளை இழந்தது.

    இதில் குல்தீப் யாதவ் 2-வது முறையாக ஹாட்ரிக் விக்கெட் சாதனை படைத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷாய்ஹோப் 78 ரன்னும், நிகோலஸ் பூரன் 75 ரன்னும் எடுத்தனர்.

    ரோகித்சர்மா.

    நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது. தவறவிட்ட கேட்சுகளை பிடித்து இருந்தால் வெஸ்ட் இண்டீசை இன்னும் குறைவான ரன்னில் ஆல்-அவுட் ஆக்கி இருக்கலாம்.

    வெற்றி குறித்து இந்திய கேப்டன் வீராட்கோலி கூறியதாவது:-

    கடந்த 3 ஆட்டங்களில் (மும்பையில் நடந்த கடைசி 20 ஓவர் போட்டியை சேர்த்து) நல்ல வி‌ஷயம் என்னவென்றால் நாங்கள் முதலில் பேட்டிங் செய்து நன்றாக விளையாடினோம் என்பதுதான். 2-வது பேட்டிங் செய்வது பிரச்சினையல்ல. சேசிங்கில் நாங்கள் சிறந்த அணிகளில் நன்றாக இருக்கிறோம். 40 முதல் 50 ரன்கள் கூடுதலாக எடுப்பது எப்போதுமே நல்லது.

    ரோகித்சர்மா-லோகேஷ் ராகுல் சிறப்பாக விளையாடினார்கள். அவர்களது தொடக்க ஜோடி ரன் குவிப்பால் வெற்றி கிடைத்தது. ஸ்ரேயாஸ் அய்யர்- ரி‌ஷப்பண்ட் ஆட்டமும் அற்புதமாக இருந்தது. 20 ஓவர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து ரன் குவித்ததால் நம்பிக்கை மேலும் அதிகரித்தது.

    தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய தொடர்கள் எதுவும் இல்லாததால் பயமின்றி விளையாடலாம். ஒரு கேப்டனாக டாசை தோற்றாலும், முதலில் பேட்டிங் செய்து ரன் குவித்த விதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது நாங்கள் டாஸ் ஜெயிப்பதை நம்பியிருக்கவில்லை என்பதை காட்டுகிறது.

    பேட்டிங் மூலம் எதிரணியை போட்டியில் இருந்து வெளியேற்ற விரும்புகிறோம். பீல்டிங்கில் முன்னேற்றம் காண்பது அவசியம். கேட்ச்களை நாங்கள் தவறவிட கூடாது. பீல்டிங்கிலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்றார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வென்று இருந்தது. 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந்தேதி கட்டாக்கில் நடக்கிறது.

    Next Story
    ×