search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவாஸ்கர், சவுரவ் கங்குலி, விராட் கோலி
    X
    கவாஸ்கர், சவுரவ் கங்குலி, விராட் கோலி

    தாதா அணியிடம் இருந்துதான் தொடங்கியது: ஐஸ் வைக்கிறார் கோலி- கவாஸ்கர் தாக்கு

    கங்குலி காலத்தில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த தொடங்கியது என்று விராட் கோலி கூறியதற்கு கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான பிங்க்-பால் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

    வங்காளதேச அணிக்கெதிரான தொடரை 2-0 என வென்றதன் மூலம் இந்தியா சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 12 தொடர்களை வென்று சாதனைப் படைத்துள்ளது. அதேபோல் வெளிநாட்டு மண்ணிலும் குறிப்பிடத்தகுந்த வகையில் வெற்றிகளை பெற்று வருகிறது. முதல்முதலாக ஆஸ்திரேலியாவில் தொடரை வென்று சாதனைப் படைத்தது.

    இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முதுகெலும்பாக உள்ளனர். நேற்றைய பிங்க்-பால் போட்டி முடிந்து கோப்பையை வாங்கும் நிகழ்ச்சியில் விராட் கோலி பேசினார். அப்போது ‘‘இந்திய அணியின் தொடர் வெற்றிகள் உடனடியாக வந்தது இல்லை. 2000-த்தில் தாதாவின் கேப்டன் பதவியில் இருந்து தொடங்கப்பட்டது. அதை முன்னோக்கி எடுத்துச் சொல்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

    இதற்கு சுனில் கவாஸ்கர் பதில் அளிக்கையில்  ‘‘இது சூப்பர் வெற்றிதான். ஆனால் நான் சில விஷயங்களை சொல்ல வேண்டும். இந்திய அணி கேப்டன் விராட் கோலி இது 2000-த்தில் கங்குலி தலைமையிலான அணியில் இருந்து தொடங்கியதாக தெரிவித்துள்ளார். தாதா பிசிசிஐ-யின் தலைவராக இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். ஆகவே, கங்குலியை பற்றி சில நல்ல விஷயங்களை சொல்வதற்கு விராட் கோலி விரும்பியிருக்கலாம். ஆனால் இந்தியா ஏற்கனவே 1970 மற்றும் 80-களில் வெற்றி பெற்றிருக்கிறது. அப்போது விராட் கோலி பிறக்கவில்லை.

    ஏராளமானோர் 2000-த்தில் இருந்து கிரிக்கெட் தொடங்கியதாக நினைக்கிறார்கள். ஆனால், வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி 1970-ல் வெற்றி பெற்றிருக்கிறது. 1986-ல் இந்திய அணி வெளிநாட்டில் வெற்றி பெற்றுள்ளது. வெளிநாட்டு தொடர்களை டிரா செய்துள்ளோம். மற்ற அணிகளை போன்று அவர்களும் தோற்றுள்ளனர்’’ என்றார்.

    கங்குலி கேப்டனாக இருந்த காலக்கட்டத்தில்தான் இந்தியா வெளிநாட்டு மண்ணில் அதிக அளவில் வெற்றி பெற தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×