என் மலர்
செய்திகள்

விராட் கோலி
கொல்கத்தா பகலிரவு டெஸ்ட்: சதமடித்து அசத்தினார் விராட் கோலி
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதமடித்து அசத்தினார்.
கொல்கத்தா:
இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லிய பந்து வீச்சில் சிக்கி வங்காளதேச வீரர்கள் வெளியேறினர். இதனால் வங்காளதேசம் அணி 30.3 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், மொகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். அகர்வால் 14 ரன்னிலும், ரோகித் சர்மா 21 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த புஜாராவும் கேப்டன் விராட் கோலியும் நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தனர். முதல் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 59 ரன்னும், ரகானே 23 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ரகானேவும் கோலியும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ரகானே 51 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் 27வது சதம் இதுவாகும்.
தற்போது 4 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆடி வருகிறது. விராட் கோலி 130 ரன்னுடனும் ரவீந்திர ஜடேஜா 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Next Story






