search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயங்க் அகர்வால், ரகானே
    X
    மயங்க் அகர்வால், ரகானே

    இந்தூர் டெஸ்ட்: விராட் கோலி டக்-அவுட், மயங்க் அகர்வால் சதம்

    வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்டில் விராட் கோலி டக்-அவுட் ஆன நிலையில், மயங்க் அகர்வால் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.
    இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று இந்தூரில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேச அணி கேப்டன் மொமினுல் ஹக் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்கம் முதலே வங்காளதேச வீரர்கள் இந்திய பந்து வீச்சுக்கு திணறினார்கள். 31 ரன்னுக்கு 3 விக்கெட் டை இழந்தது. அதன்பிறகு மொமினுல் ஹக் - முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சிறிது தாக்கு பிடித்து விளையாடியது.

    மொமினுல் ஹக் 37 ரன்னிலும், அடுத்து வந்த மெஹ்முதுல்லா 10 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 43 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் விக்கெட்டுகள் சரிந்தன. வங்காளதேச அணி 58.3 ஓவரில் 150 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், அஸ்வின் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை விளையாடியது. தொடக்க வீரர் ரோகித் சர்மா 6 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பிறகு மயங்க் அகர்வால் - புஜாரா ஜோடி நிதானமாக விளையாடியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 26 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன் எடுத்து இருந்தது. மயங்க் அகர்வால் 37 ரன்னுடனும், புஜாரா 43 ரன்னுடனும் ஆட்மிழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா - மயங்க் அகர்வால் தொடர்ந்து விளையாடினர். புஜாரா 68 பந்தில் அரை சதம் அடித்தார். அதன்பின் சிறிது நேரத்தில் அவர் 54 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை அபு ஜயத் கைப்பற்றினார்.

    அடுத்து களம் வந்த கேப்டன் விராட் கோலி டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவர் அபு ஜயத் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். கோலி அவுட் ஆனபோது ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்னாக இருந்தது.

    ஜயத் பந்தில் ஆட்டமிழந்த விராட் கோலி

    அடுத்து மயங்க் அகர்வாலுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடினார்கள். அகர்வால் அரைசதத்தை கடந்தார். நேரம் செல்லசெல்ல இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

    ரகானே அரைசதம் அடிக்க மறுமுனையில் அரைசதத்தை சதமாக மாற்றினார் மயங்க் அகர்வால். இந்தியாவில் விளையாடிய நான்கு டெஸ்டில் 3-வது சதத்தை பதிவு செய்துள்ளார்.

    தொடர்ந்து விளையாடிய அவர் 150 ரன்னைக் கடந்துள்ளார். மதியம் 2 மணி நிலவரப்படி இந்தியா 79 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் அடித்துள்ளது. மயங்க் அகர்வால் 153 ரன்னுடனும், ரகானே 70 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×