search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்எஸ் டோனி
    X
    எம்எஸ் டோனி

    பகல்-இரவு டெஸ்டில் டோனி வர்ணனையாளராக செயல்படமாட்டார்

    கொல்கத்தாவில் நடைபெறும் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் டோனி வர்ணனையாளராக செயல்படமாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடக்கிறது.

    இந்த டெஸ்ட் போட்டி பகல் - இரவாக நடக்கிறது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி நடத்தப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பி.சி.சி.ஐ.) தலைவராக கங்குலி சமீபத்தில் பொறுப்பேற்றார். அவரது தீவிர முயற்சியால்தான் இந்திய அணி முதல் முறையாக பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகிறது.

    இதனால் இந்த டெஸ்ட்டை மிகவும் சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. பிரபலங்கள் அனைவரையும் இந்த போட்டிக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்திய அணிக்கு 2 உலக கோப்பையை பெற்றுக்கொடுத்த டோனியை பகல் - இரவு டெஸ்ட்டில் சிறப்பு வர்ணனையாளராக செயல்பட வைக்க ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் திட்டமிட்டது.

    இதற்காக அந்த நிறுவனம் பி.சி.சி.ஐ.யிடம் அனுமதி கேட்டது. ஆனால், பி.சி.சி.ஐ. இதுவரை எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

    இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் டோனி வர்ணனையாளராக செயல்படமாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அவர் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் விளையாடி வருகிறார். இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை போட்டிக்கு பிறகு அவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வு பெறாமல் அணியில் இருந்து ஓதுங்கி இருக்கிறார்.

    டோனி ஓய்வு பெறாததால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய ஓப்பந்த வீரராகவே இருக்கிறார். வர்ணனையாளராக செயல்பட்டால் இரட்டை ஆதாய பதவி குற்றச்சாட்டு டோனி மீது கூறப்படும். இதன் காரணமாக அவர் வர்ணனையாளராக பணியாற்ற மாட்டார் என்று அந்த தகவல் தெரிவிக்கிறது.
    Next Story
    ×