search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி  வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட காட்சி
    X
    இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட காட்சி

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா வெற்றியுடன் தொடங்குமா? முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது.
    விசாகப்பட்டினம்:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 2-வது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் டெஸ்ட் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை (2-ந்தேதி) தொடங்குகிறது.

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2 டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்றியது. இதனால் தென் ஆப்பிரிக்காவை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும்.

    இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மோதிய ஜோகன்ஸ் பார்க் டெஸ்டில் இந்தியா 63 ரன்னில் வெற்றி பெற்றது. இந்திய மண்ணில் இரு அணிகளும் கடைசியாக 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் மோதின. இதில் இந்தியா 337 ரன்னில் வெற்றி பெற்றது.

    சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணி கூடுதல் பலத்துடன் திகழும்.

    வெஸ்ட்இண்டீஸ் பயணத்தில் தொடக்க வீரராக ஆடிய லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டுள்ளார். இதனால் நாளைய டெஸ்டில் அகர்வாலுடன் தொடக்க வீரராக களம் இறங்க போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் தொடக்க வரிசையில் விளையாடும் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக ஆட வைக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளது. ஆனால் பயிற்சி ஆட்டத்தில் அவர் தொடக்க வீரராக ஆடி ‘டக்’ அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால் புதுமுக வீரான சுப்மன் ஹில்லுக்கு தொடக்க வரிசை வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    அதே நேரத்தில் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடி வரும் விகாரியும் தொடக்க வரிசையில் விளையாடக்கூடியவர். அவர் தொடக்க வீரராக ஆடினால் ரோகித் சர்மாவுக்கு மிடில் ஆர்டரில் வாய்ப்பு கிடைக்கும். அவருக்கு வெஸ்ட்இண்டீஸ் தொடரில் ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

    ரோகித் சர்மா அல்லது சுப்மன்ஹில் தொடக்க வரிசையில் இடம் பெற்றால் விகாரி மிடில் ஆர்டரில் தொடர்ந்து ஆடுவார்.

    விக்கெட் கீப்பிங்கில் ரி‌ஷப்பந்துக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது பேட்டிங் மற்றும் கீப்பிங் மோசமாக இருந்ததாக விமர்சிக்கப்பட்டது. இதனால் அவர் நீக்கப்பட்டால் விர்த்திமான் சஹாவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருக்கிறது. கேப்டன் விராட்கோலி, புஜாரா, ரகானே, விகாரி ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர்.

    பந்துவீச்சில் வேகப்பந்து வீரர் இல்லாதது பாதிப்பே. ஆனால் இந்திய மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும். பும்ராவுக்கு பதிலாக உமேஷ்யாதவுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    வேகப்பந்து வீரர்களில் முகமது ‌ஷமியும், இஷாந்த் சர்மாவும் இடம்பெறுவார்கள். வெஸ்ட்இண்டீஸ் தொடரில் சுழற்பந்து வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. உள்ளூரில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் அவர் இடம் பெறுவார். ஜடேஜாவுடன் இணைந்து அவர் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழும் இந்தியா தனது ஆதிக்கத்தை நீட்டித்துக்கொள்ளும் வேட்கையில் உள்ளது.

    டுபெலிசிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவின் ஆதிக்கத்தை சமாளிக்க கடுமையாக போராட வேண்டும். ஹசிம் அம்லா, ஸ்டெய்ன் ஓய்வு அந்த அணிக்கு பாதிப்பே.

    கேப்டன் டுபெலிசிஸ், எல்கர், மர்கிராம், குயின்டன் டிகாக், பவுமா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், பிலாண்டர், ரபடா, கேசவ் மகராஜ் போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.

    நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா: விராட்கோலி (கேப்டன்), அகர்வால், சுப்மன் ஹில், புஜாரா, ரகானே, விகாரி, ரோகித்சர்மா, ஜடேஜா, ரி‌ஷப்பந்த், விர்த்திமான் சஹா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், அஸ்வின், முகமது ‌ஷமி.

    தென்ஆப்பிரிக்கா: டு பெலிசிஸ் (கேப்டன்), எல்கர், மர்கிராம், பவுமா, குயின்டன் டிகாக், ரபடா, பிலாண்டர், கேசவ் மகராஜ், டி புருயின், கிளாசன், நிகிடி, செனுரான் முத்துசாமி, ஆன்ரிச் நோர்ட்ஜே, டானே பியட், சுபையர் ஹம்சா.
    Next Story
    ×