search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-ஐதராபாத் அணிகள் மீண்டும் மோதல்
    X

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-ஐதராபாத் அணிகள் மீண்டும் மோதல்

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன. #IPL2019 #CSK #SRH #CSKvsSRH
    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    நடப்பு சாம்பியனான சென்னை அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. சென்னை அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அடுத்த சுற்றை (பிளே-ஆப்) உறுதி செய்து விடும். முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 9 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

    சென்னை அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் அடுத்தடுத்து ஐதராபாத், பெங்களூரு அணிகளிடம் தோல்வி கண்டது. பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கேப்டன் டோனி 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். டோனி இதுவரை 314 ரன்கள் குவித்து நல்ல நிலையில் உள்ளார். ‘டாப்-3’ பேட்ஸ்மேன்களான ஷேன் வாட்சன் (147 ரன்), அம்பத்தி ராயுடு (192 ரன்), சுரேஷ் ரெய்னா (207 ரன்) ஆகியோர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாதது சென்னை அணிக்கு சற்று பின்னடைவாக அமைந்துள்ளது.



    பந்து வீச்சில் இம்ரான் தாஹிர் (16 விக்கெட்), தீபக் சாஹர் (13 விக்கெட்) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். சென்னை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஹர்பஜன்சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் (517 ரன்கள்), பேர்ஸ்டோ (445 ரன்கள்) ஆகியோர் பேட்டிங்கில் கலக்கி வருகிறார்கள். உலக கோப்பை போட்டிக்கான தங்கள் நாட்டு அணியில் இடம் பிடித்து இருக்கும் இருவரும் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பும் முன்பு ஐதராபாத் அணியை அடுத்த சுற்றுக்கு முன்னேற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர். அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் தான் சற்று பிரச்சினைக்குரியதாக உள்ளது. கடந்த 2 லீக் ஆட்டங்களில் ஐதராபாத் அணி முறையே சென்னை, கொல்கத்தா அணிகளை எளிதில் வீழ்த்தியது. அந்த நம்பிக்கையுடன் ஐதராபாத் அணி இந்த ஆட்டத்தில் களம் காணும். பந்து வீச்சில் ரஷித் கான், புவனேஷ்வர்குமார் ஆகியோர் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

    சென்னை அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவதுடன், முந்தைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்ய முழு முனைப்பு காட்டும். இந்த சீசனில் சென்னை அணி உள்ளூரில் தோல்வியை சந்திக்காமல் 4 வெற்றியை தொடர்ச்சியாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் ஐதராபாத் அணி தனது வெற்றிப்பயணத்தை தொடர எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    சென்னை, ஐதராபாத் அணிகள் இதுவரை 11 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் சென்னை அணி 8 முறையும், ஐதராபாத் அணி 3 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:-

    சென்னை சூப்பர் கிங்ஸ்: டோனி (கேப்டன்), ஷேன் வாட்சன், டுபிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, ஷர்துல் தாகூர் அல்லது ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.

    ஐதராபாத் சன் ரைசர்ஸ்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேவிட் வார்னர், பேர்ஸ்டோ, விஜய் சங்கர், யூசுப் பதான், தீபக் ஹூடா, ரஷித் கான், புவனேஷ்வர்குமார், ஷபாஸ் நதீம், கலீல் அகமது, சந்தீப் ஷர்மா.  #IPL2019 #CSK #SRH #CSKvsSRH
    Next Story
    ×