search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணி 2-வது வெற்றி பெறுமா? - டெல்லியுடன் இன்று மோதல்
    X

    ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணி 2-வது வெற்றி பெறுமா? - டெல்லியுடன் இன்று மோதல்

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. #IPL2019 #CSK #DC
    புதுடெல்லி:

    12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் ‘டாப்-4’ இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. 70 ரன்னில் பெங்களூரு அணியை சுருட்டிய சென்னை அணி 18-வது ஓவரில் தான் வெற்றி இலக்கை எட்டியது. ஷேன் வாட்சன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தி பந்து வீச்சில் கலக்கினார்கள்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் சாய்த்து தங்கள் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறது. டெல்லி அணியில் பேட்டிங்கில் ரிஷப் பந்த், காலின் இங்ராம், ஷிகர் தவான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ரிஷப் பந்த் அதிரடியாக ஆடி கலக்கி வருகிறார். வேகப்பந்து வீச்சில் இஷாந்த் ஷர்மா, ரபடா, டிரென்ட் பவுல்ட் ஆகியோர் மிரட்டி வருகிறார்கள்.

    பெரோஸ்ஷா கோட்லா மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும். சென்னை அணியில் சுழற்பந்து வீச்சில் கடும் சவால் அளிக்கக்கூடிய 3 பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களை டெல்லி அணி எப்படி சமாளிக்கிறது? என்பதை பொறுத்தே அந்த அணியின் ரன் குவிப்பு அமையும். அனுபவம் வாய்ந்த வீரர்களை உள்ளடக்கிய சென்னை அணி, டெல்லி அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்றைய ஆட்டம் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு இடையிலான மோதல் எனலாம். இரு அணிகளும் 2-வது வெற்றியை பெற முனைப்பு காட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    சென்னை-டெல்லி அணிகள் இதுவரை 18 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் சென்னை அணி 12 முறையும், டெல்லி அணி 6 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:-

    சென்னை சூப்பர் கிங்ஸ்: டோனி (கேப்டன்), ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), பிரித்வி ஷா, ஷிகர் தவான், காலின் இங்ராம், ரிஷப் பந்த், கீமோ பால், அக்‌ஷர் பட்டேல், ராகுல் திவேதியா, ரபடா, டிரென்ட் பவுல்ட், இஷாந்த் ஷர்மா. #IPL2019 #CSK #DC
    Next Story
    ×