search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேப்பாக்கம் மைதானத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு - 2 ஆயிரம் போலீசார் குவிப்பு
    X

    சேப்பாக்கம் மைதானத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு - 2 ஆயிரம் போலீசார் குவிப்பு

    ஐ.பி.எல். போட்டியையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #IPL2019 #CSK #RCB
    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    ஐ.பி.எல். போட்டியையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரசிகர்கள் 4 அடுக்கு பாதுகாப்பை கடந்த பிறகே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    நுழைவு வாயில் இருந்து ஸ்டேடியத்தில் உள்ள இருக்கை வரை இந்த 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    கமாண்டோ உள்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் மைதானத்தை சுற்றிலும் சிறப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    கடந்த ஐ.பி.எல். போட்டியின் போது காவிரி போராட்டம் காரணமாக மைதான பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து ஐ.பி.எல். போட்டி புனேக்கு மாற்றப்பட்டது.


    கடந்த முறையை போல தற்போது எந்த விதமான அசம்பாவித சம்பவமும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக ஸ்டேடியத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சேப்பாக்கம் ஸ்டேடியத்தை சுற்றிலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    வெடிகுண்டு நிபுணர்களும் மோப்பநாயும் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். ரசிகர்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.



    வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல்களுக்கும் கூடுதலான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல போலீசாருடன் தனியார் தன்னார்வ தொண்டர்களும் இணைந்து பாதுகாப்பில் ஈடுபடுகிறார்கள்.

    ஐ.பி.எல். போட்டிக்காக சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். போட்டி முடிந்து ரசிகர்கள் செல்வதற்கு வசதிக்காக இந்த ரெயில்கள் இயக்கப்படுகிறது. #IPL2019 #CSK #RCB 
    Next Story
    ×