search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது எளிதானதல்ல: அறிமுக போட்டியில் 76 ரன்கள் விளாசிய மயாங்க் அகர்வால் சொல்கிறார்
    X

    உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது எளிதானதல்ல: அறிமுக போட்டியில் 76 ரன்கள் விளாசிய மயாங்க் அகர்வால் சொல்கிறார்

    அறிமுக போட்டியில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி ஆட்டத்தில் கவனம் செலுத்துவது எளிதான காரியம் அல்ல என மயாங்க் அகர்வால் தெரிவித்துள்ளார். #AUSvIND #MayankAgarwal
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் சொதப்பியதால், இந்த போட்டியில் மயாங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    உள்ளூர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மயாங்க் அகர்வாலுக்கு தற்போதுதான் இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் அறிமுகம் ஆனது அவரின் அதிர்ஷ்டம்.

    73 ஆயிரம் ரசிகர்கள் கூடியிருந்த மைதானத்தில் கம்பீரமாக இருவரும் களம் இறங்கினார்கள். முதல் போட்டியில், இவ்வளவு பெரிய ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடுகிறோம் என்ற பதற்றம் இல்லாமல் மயாங்க் அகர்வால் விளையாடினார். விஹாரி 8 ரன்கள் மட்டுமே எடுத்தாலும் 66 பந்துகள் சந்தித்து களத்தில் நின்றார். மறுமுனையில் மயாங்க் அகர்வால் சிறப்பாக விளையாடியதால் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 18.5 ஓவரில் 40 ரன்கள் சேர்த்தது.

    95 பந்தில் 6 பவுண்டரியுடன் அரைசதம் அடித்த மயாங்க் அகர்வால் தேனீர் இடைவேளைக்கு சற்று முன் கம்மின்ஸ் பந்தில் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிந்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மயாங்க் அகர்வால் கூறியதாவது:-

    புகழ் வாய்ந்த அறிமுக போட்டியில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி ஆட்டத்தின் மீது கவனம் செலுத்துவது எளிதான காரியம் அல்ல. ஆனால், ரன்கள் குவிக்க இது தேவையானது. நான் என்னுடைய திட்டத்தில் உறுதியாக நின்று, அதை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்பதை எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.

    என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை அரைசதத்துடன் தொடங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. டெஸ்ட் போட்டி என்பது மிகப்பெரிய இடம். எனக்கு கிடைத்தது மிகப்பெரிய வாய்ப்பு. நான் சீனியர் வீரர்களுடன் வளம்வரும்போது இது மிகப்பெரிய நாள், மிகப்பெரிய வாய்ப்பு என்றார்கள்.

    76 ரன்கள் என்பது மகிழ்ச்சியே. இருந்தாலும் அதிக ரன்கள் எடுத்திருக்கனும். நான் களத்திற்கு சென்று அதிக ரன்கள் அடிக்க வேண்டும், நாள் முழுவதும் தாக்குப்பிடித்து விளையாட வேண்டும் என்று விரும்பினேன்.

    இவ்வாறு மயாங்க் அகர்வால் கூறினார்.
    Next Story
    ×