search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்
    X

    கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. #indvsaus #t20cricket
    சிட்னி:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    முதலாவது ஆட்டத்தில் ரன்களை அள்ளி கொடுத்த இந்திய பவுலர்கள் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை (19 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 132 ரன்) வெகுவாக கட்டுப்படுத்தினர். ஆனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை கெடுத்து விட்டது. இனி தொடரை வெல்வதற்கு வாய்ப்பில்லை என்ற நிலையில் இன்றைய ஆட்டத்தில் வென்று தொடரை சமன் செய்வதற்கு இந்திய வீரர்கள் தீவிர முனைப்பு காட்டுவார்கள். இதில் கிடைக்கும் வெற்றி மிகவும் முக்கியமானது. ஏனெனில் அது டெஸ்ட் தொடரை எதிர்கொள்வதற்கு கூடுதல் நம்பிக்கையை கொடுக்கும். பொதுவாக சிட்னி ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கக்கூடியது. இதனால் 3-வது சுழற்பந்து வீச்சாளராக யுஸ்வேந்திர சாஹலை சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

    இந்த ஆண்டில் நிறைய சறுக்கலை சந்தித்து இருக்கும் ஆஸ்திரேலிய அணியினர், அதற்கு பரிகாரம் தேடும் வகையில் இந்த தொடரை வசப்படுத்த வரிந்து கட்டுவார்கள். பயிற்சியின் போது கணுக்காலில் காயமடைந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டான்லேக்குக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க் அழைக்கப்பட்டு உள்ளார். 2016-ம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆடாத ஸ்டார்க் இன்று களம் காணுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த போட்டிக்கு மழையால் ஆபத்து இருக்காது என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    சிட்னியில் இதுவரை ஐந்து 20 ஓவர் ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் 4-ல் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ஒன்றில் வீழ்ந்தது. அந்த தோல்வி இந்தியாவுக்கு எதிராக (2016-ம் ஆண்டு) அடைந்தது ஆகும். இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 198 ரன்கள் இலக்கை இந்திய அணி கடைசி பந்தில் எட்டி சாதனை படைத்தது நினைவிருக்கலாம்.

    இந்திய அணி கடைசியாக ஆடிய ஒன்பது 20 ஓவர் கிரிக்கெட் தொடர்களை இழந்ததில்லை. அந்த பெருமையை இந்திய அணி தக்கவைக்குமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), தினேஷ் கார்த்திக், ரிஷாப் பான்ட், குருணல் பாண்ட்யா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா, கலீல் அகமது அல்லது யுஸ்வேந்திர சாஹல்.

    ஆஸ்திரேலியா: டார்சி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கிறிஸ் லின், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் காரி, பென் மெக்டெர்மோட், ஜாசன் பெரென்டோர்ப், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க் அல்லது நாதன் கவுல்டர்-நிலே ஆண்ட்ரூ டை.

    இந்திய நேரப்படி பிற்பகல் 1.20 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. #indvsaus #t20cricket
    Next Story
    ×