search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரிவில் இருந்து மீட்ட சேஸ், ஹோல்டர்- வெஸ்ட் இண்டீஸ் முதல் நாள் முடிவில் 295/7
    X

    சரிவில் இருந்து மீட்ட சேஸ், ஹோல்டர்- வெஸ்ட் இண்டீஸ் முதல் நாள் முடிவில் 295/7

    ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர் ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்ட வெஸ்ட் இண்டீஸ் முதல் நாளில் 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் சேர்த்துள்ளது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஹெட்மையர் 10 ரன்னுடன் களத்தில் இருந்தார். மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஹெட்மையர் உடன் அம்ப்ரிஸ் ஜோடி சேர்ந்தார். ஹெட்மையர் 12 ரன்கள் எடுத்த நிலையிலும், அம்ப்ரிஸ் 18 ரன்கள் எடுத்த நிலையிலும் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 38.5 ஓவரில் 113 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது.

    6-வது விக்கெட்டுக்கு ரோஸ்டன் சேஸ் உடன் விக்கெட் கீப்பர் டவ்ரிச் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. தேனீர் இடைவேளைக்கு சற்றுமுன் டவ்ரிச் 30 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ ஆனார். 6-வது விக்கெட்டுக்கு சேஸ் - டவ்ரிச் ஜோடி 69 ரன்கள் சேர்த்தது.



    அடுத்து சேஸ் உடன் கேப்டன் ஹோல்டர் ஜோடி சேர்ந்தார். ரோஸ்டன் சேஸ் சிறப்பாக விளையாடி 80 பந்தில் அரைசதம் அடித்தார். தேனீர் இடைவேளை வரை வெஸ்ட் இண்டீஸ் 65 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்ததது. ரோஸ்டன் சேஸ் 50 ரன்களுடனும், ஹோல்டர் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    தேனீர் இடைவேளை முடிந்து பின்னர் இருவரும் மீண்டும் ஆட்டத்தை தொடங்கினார்கள். இருவரும் இந்தியாவின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடினார்கள். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் 250 ரன்னைத் தாண்டியது.

    ஜேசன் ஹோல்டர் 85 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 52 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். ரோஸ்டன் சேஸ் - ஹோல்டர் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்தது. அடுத்து ரோஸ்டர் சேஸ் உடன் பிஷூ ஜோடி சேர்ந்தார். ரோஸ்டன் சேஸ் சதத்தை நோக்கி முன்னேறிச் சென்றார்.



    வெஸ்ட் இண்டீஸ் அணி 95 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல்நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. ரோஸ்டன் சேஸ் 98 ரன்னுடனும், பிஷூ 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்த அணி சார்பில் உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    Next Story
    ×