search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎல் 2018 கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் கோவை கிங்ஸ் அணி மோதல்
    X

    டிஎன்பிஎல் 2018 கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் கோவை கிங்ஸ் அணி மோதல்

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நெல்லையில் இன்று இரவு நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, கோவை கிங்சை எதிர்கொள்கிறது. #TNPL2018 #ChepaukSuperGillies #KovaiKings
    நெல்லை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் நெல்லை சங்கர் நகரில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, கோவை கிங்ஸ் அணியை சந்திக்கிறது.

    கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை ஆடிய 3 லீக் ஆட்டங்களிலும் (திருச்சி வாரியர்ஸ், மதுரை பாந்தர்ஸ், காரைக்குடி காளைக்கு எதிராக) தோல்வியையே சந்தித்துள்ளது. அதே சமயம் அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி முதல் லீக் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் காரைக்குடி காளை அணியை வென்றது. அடுத்த 2 ஆட்டங்களில் திண்டுக்கல் டிராகன்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகளிடம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு 8 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்சை வீழ்த்தி கோவை அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது.



    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை பொறுத்தவரை எஞ்சிய 4 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். எனவே இன்றைய ஆட்டம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு வாழ்வா?-சாவா? போட்டியாகும். அதனால் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருக்கும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்த முயற்சிக்கும்.

    நெல்லை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது. எனவே முந்தைய ஆட்டத்தில் நன்றாக செயல்பட்ட மணிகண்டன், அஜித்ராம், ராஜேஷ் ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் கோவை கிங்ஸ் அணி களம் இறங்கும். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அலெக்சாண்டர், எம்.அஸ்வின் ஆகிய சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். எனவே இந்த ஆட்டத்தில் சுழலுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கலாம். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பீல்டிங் மற்றும் பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

    இந்திய ‘ஏ’ அணிக்கு தேர்வாகியிருந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் முதல் 3 ஆட்டங்களில் ஆடவில்லை. தற்போது தாயகம் திரும்பி விட்டாலும் காயம் காரணமாக இன்றைய ஆட்டத்திலும் அவர் விளையாட வாய்ப்பில்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 முறையும், கோவை கிங்ஸ் அணி ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளன. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.  #TNPL2018 #ChepaukSuperGillies #KovaiKings
    Next Story
    ×