search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளேஆப் சுற்று ஆர்வத்தில் ராஜஸ்தான்- பெங்களூர் இன்று பலப்பரீட்சை
    X

    பிளேஆப் சுற்று ஆர்வத்தில் ராஜஸ்தான்- பெங்களூர் இன்று பலப்பரீட்சை

    பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் ராஜஸ்தான்- பெங்களூர் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். மற்றொரு ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ஐதராபாத்துடன் மோதுகிறது. #IPL2018
    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். போட்டியில் லீக் ஆட்டம் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (16 புள்ளி), ஆகிய 2 அணிகள் மட்டுமே ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய 2 அணி எவை எவை என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (14 புள்ளி) மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தலா 12 புள்ளி) ஆகிய 5 அணிகள் இதற்கான போட்டியில் உள்ளன. டெல்லி டேர்டெவில்ஸ் (8 புள்ளி) ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது.

    இன்னும் 4 ஆட்டங்களே எஞ்சியுள்ளன. அதாவது 8 அணிக்கும் ஒரு ஆட்டமே உள்ளன. இன்றைய போட்டியின் முடிவில் ஒரு அணி வெளியேற்றப்படும்.

    நாளையுடன் ‘லீக்‘ ஆட்டம் முடிகிறது. 43-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி ‘பிளே ஆப்’ வாய்ப்பில் நீடிக்கும். தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் இரு அணியும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடும்.

    ரன்ரேட் முக்கிய பங்கு வகிப்பதால் வெற்றி பெறும் அணி நிகர ரன்ரேட்டையும் உயர்த்துவது அவசியமாகும். பெங்களூர் அணியின் ரன்ரேட் +0.26 ஆக உள்ளது. ராஜஸ்தான் நிகர ரன்ரேட் -0.39 ஆகும்.

    பட்லா, பென்ஸ்டோர் ஆகியோர் இங்கிலாந்துக்கு திரும்பியது ராஜஸ்தான் அணிக்கு பாதிப்பே. உள்ளூரில் விளையாடுவது மட்டுமே அந்த அணிக்கு சாதகம். அந்த அணியில் கேப்டன் ரகானே, சஞ்சு சாம்சன், ஆர்சிஷார்ட் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர். பெங்களூரை ராஜஸ்தான் 19 ரன்னில் தோற்கடித்து இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

    பெங்களூர் அணி ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வெற்றியை பெற்று ‘பிளே- ஆப்’ சுற்றில் நீடிக்கும் ஆர்வத்தில் உள்ளது. விராட் கோலி, டிவில்லியர்ஸ், மொய்ன்அலி போன்ற அதிரடி வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்தி தங்களது அணியை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல போராடுவார்கள். பந்து வீச்சில் சாஹல், உமேஷ்யாதவ் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஐதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும். 2-வது ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஐதராபாத் அணியை பொறுத்தவரை சம்பிரதாயமான ஆட்டமே. ஏற்கனவே ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் அந்த அணி 10-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. கடைசியாக ஆடிய 2 போட்டியில் தோற்றதால் அந்த அணி வெற்றிக்காக போராடும். கேப்டன் வில்லியம்ஸ், தவான், மனிஷ் பாண்டே, யூசுப்பதான் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், புவனேஸ்குமார், ரஷித்கான், சித்தார்த்கவுல் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

    கொல்கத்தா அணி, ஐதராபாத்தை வீழ்த்தி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. 14 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி வெற்றி பெற்றால் தகுதி பெறும்.

    தோல்வி அடைந்தால் நாளை நடைபெறும் ஆட்டங்களின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் மோசமாக தோற்றால் வெளியேறும் நிலையும் ஏற்படலாம். இதனால் அந்த அணி வீரர்கள் வெற்றிக்காக போராடுவார்கள். கிறிஸ் லின், உத்தப்பா, கேப்டன் தினேஷ் கார்த்திக், நரேன், ரஸ்சல் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    கொல்கத்தா அணி ஏற்கனவே ஐதராபாத்திடம் 5 விக்கெட்டில் தோற்றது. இதனால் பதிலடி கொடுக்கும் வகையில் ஆடும்.

    பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் ஆட்டங்கள் என்பதால் இன்றைய 2 போட்டிகளும் பரபரப்பாக இருக்கும். #IPL2018
    Next Story
    ×