என் மலர்
விளையாட்டு


டோக்கியோ:
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை நடந்த 50 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் அமெரிக்க வீரர் டிரெசல் புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
அவர் பந்தய தூரத்தை 21.07 வினாடியில் கடந்தார். இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் பிரேசில் வீரர் சியலோ 21.30 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
டிரெசல் டோக்கியோ ஒலிம்பிக்கில் கைப்பற்றிய 4-வது தங்கப்பதக்கம் இதுவாகும். ஏற்கனவே 100 மீட்டர் பட்டர்பிளை, 100 மீட்டர் பிரீஸ்டைல், 4*100 பிரீஸ்டைல் தொடர் நீச்சல், 4*100 மீட்டர் மெட்லி தொடர் நீச்சல் ஆகியவற்றில் தங்கம் வென்றிருந்தார்.
ஒட்டுமொத்தத்தில் ஒலிம்பிக்கில் டிரெசல் 6-வது தங்கத்தை கைப்பற்றினார். ரியோ ஒலிம்பிக்கில் அவர் 2 தங்கப்பதக்கமும் வென்றார்.
பெண்களுக்கான 4*100 மீட்டர் மெட்லே தொடர் நீச்சலில் ஆஸ்திரேலியா புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றது.
ஹோட்சஸ், மெக்கவுன், கேம்பல், கெய்லிமெக்கூன் ஆகியோர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி பந்தய தூரத்தை 3 நிமிடம் 51.60 வினாடியில் கடந்தது. இதற்கு முன்பு 2012 லண்டன் ஒலிம்பிக்கில் அமெரிக்கா 3 நிமிடம் 52.05 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. அமெரிக்காவுக்கு வெள்ளிப்பதக்கமும், கனடாவுக்கு வெண்கலபதக்கமும் கிடைத்தன.
பெண்களுக்கான 50 மீட்டர் பிரீஸ்டைலில் ஆஸ்திரேலியாவும், ஆண்களுக்கான 1,500 மீட்டர் பிரீஸ்டைலில் அமெரிக்காவும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றின.
தடகள போட்டியில் இன்று காலை சீனாவுக்கு தங்கம் கிடைத்தது. பெண்களுக்கான குண்டு எறியும் போட்டியில் அந்நாட்டை சேர்ந்த லிஜியோ காங் 20.5 8 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடத்தை பிடித்தார்.
அமெரிக்காவை சேர்ந்த சான்டர்ஸ் 19.79 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கமும், அமெரிக்காவை சேர்ந்த வளாரி ஆடம்ஸ் 19.62 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.
டோக்கியோ:
இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையும், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்றவருமான பி.வி.சிந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் லீக் ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் முதல் ஆட்டத்தில் இஸ்ரேலை சேர்ந்த பொலி கார்போவை 21-7, 21-10 என்ற கணக்கிலும், 2-வது போட்டியில் ஆங்காங் வீராங்கனை நகன் யூ சென்ங்கை 21-9, 21-6 என்ற கணக்கிலும் வீழ்த்தினார்.
கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பி.வி.சிந்து டென்மார்க்கை சேர்ந்த பிளிச் பெல்ட்டை 21-15, 21-13 என்ற கணக்கிலும், கால்இறுதியில் 5-வது வரிசையில் உள்ள யமகுச்சியை (ஜப்பான்) 21-13, 22-20 என்ற கணக்கிலும் வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரை இறுதியில் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். 7-வது வரிசையில் உள்ள அவர் 18-21, 12-21 என்ற கணக்கில் 2-ம்நிலை வீராங்கனையான தாய் சுயிங்கிடம் (சீன தைபெ) தோற்றார்.
அவரால் ஒரு செட்டை கூட வெல்லமுடியவில்லை. அந்த அளவுக்கு தாய் சு யிங்கின் ஆட்டம் மிகவும் பிரமாதமாக இருந்தது.
பி.வி.சிந்து இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் சீனாவை சேர்ந்த ஹி பி ஜியாவ்வை சந்திக்கிறார். இதில் அவர் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் பெறுவாரா? என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
சீன வீராங்கனை தர வரிசையில் 9-வது இடத்தில் உள்ளார். இதனால் பி.வி.சிந்து நம்பிக்கையுடன் விளையாடுவார்.
சென்னை:
5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக். (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் 2 ரன்னில் கோவை கிங்சை தோற்கடித்தது. மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதிய மற்றொரு போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
14-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் திருச்சி வாரியர்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
திருச்சி வாரியர்ஸ் 6 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 4- வது வெற்றி வேட்கையில் இருக்கிறது. சேலம் அணி 3 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருப்பூருடன் மோதிய முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லையிடம் தோற்றது. 3-வது ஆட்டத்தில் சேலம் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
3 புள்ளிகளுடன் இருக்கும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
திண்டுக்கல் அணி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.







