என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்: ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை- ரஜினி!
- ரஜினியின் இந்த இமாலய வளர்ச்சியைப் பார்த்து சாண்டோ சின்னப்பா தேவர் பிரமித்துப் போனார்.
- இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் அவர் கமலுக்கும், ரஜினிக்கும் சமமான வாய்ப்பு கொடுத்திருந்தார்.
சூப்பர் ஸ்டார் பட்டத்தை ரஜினி வேண்டாம் என்று சொன்னதற்கு ஒரு காரணம் இருந்தது.
தமிழ்த்திரை உலகை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த எம்.ஜி.ஆர். முதலமைச்சர் பதவியை ஏற்று, சரியாக ஓராண்டு ஆகி இருந்த போது, ரஜினியின் பைரவி படம் வெளியானது. இந்த ஓராண்டில் எம்.ஜி.ஆர். தமிழ்த்திரை உலகம் பக்கம் வரவில்லை. 35 படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, அவை அனைத்தும் அப்படியே கிடப்பில் போடப்பட்டு இருந்தன.
இந்த நிலையில்தான் எம்.ஜி.ஆர். விட்டுச் சென்ற இடத்தை ரஜினி பூர்த்தி செய்யத் தொடங்கி இருந்தார். அந்த ஓராண்டில் எம்.ஜி.ஆர். முழு நேர அரசியலில் தன்னை ஒப்படைத்து இருந்தாலும் சினிமா உலகில் என்ன நடக்கிறது என்பதையும் ஓரக்கண்ணால் கண்காணித்துக் கொண்டுதான் இருந்தார்.
அந்த சமயத்தில் ரஜினி படங்களில் லதா நடித்தது எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லை என்று சிலர் வதந்தியை கிளப்பி விட்டிருந்தனர். இதனால் ரஜினி மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.
அதே சமயத்தில் தமிழ்த்திரை உலகில் சிவாஜியும் உச்சத்தில் இருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் "சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை ஒத்துக் கொண்டால் எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இரு இமயங்களிடமும் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியது இருக்குமோ என்று ரஜினி நினைத்தார்.
எனவே அவர் கலைப்புலி தாணுவை அழைத்து, "என் பெயருக்கு முன்னாள் சூப்பர் ஸ்டார் பட்டம் போடாதீர்கள் தயவு செய்து தவிர்த்து விடுங்கள்" என்றார். ஆனால் வினியோகஸ்தர் கலைப்புலி தாணு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் பைரவி பட விளம்பரங்களில் "சூப்பர் ஸ்டார் ரஜினி" என்றே இடம் பெறச் செய்தார்.
இன்னும் சொல்லப் போனால் "சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை அவர் அதற்குப் பிறகு தான் சற்று பெரியதாக போடத் தொடங்கினார். இது தமிழக ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. எல்லோரும் ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்கத் தொடங்கினார்கள்.
1978-ம் ஆண்டு இறுதிக்குள் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி, ரஜினி என்றால் சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் நிலை உருவானது. அதன் பிறகு ரஜினியுடன் சூப்பர் ஸ்டார் பட்டம் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டு விட்டது.
ரஜினியின் இந்த இமாலய வளர்ச்சியைப் பார்த்து சாண்டோ சின்னப்பா தேவர் பிரமித்துப் போனார். ரஜினி விஷயத்தில் தனது கணிப்பு பொய்த்துப் போனதை உணர்ந்தார். ராஜகுமாரி தியேட்டருக்கு சென்று பைரவி படத்தை அவர் பார்த்த போதுதான் ரஜினி மீது ரசிகர்கள் எந்த அளவுக்கு வெறித்தனமாக அன்பு வைத்து இருக்கிறார்கள் என்பதை கண்கூடாகப் பார்த்து உணர்ந்து, புரிந்து கொண்டார்.
தமிழ்த்திரை உலகில் ரஜினி எனும் மூன்றெழுத்துப் புயல் வேகம் எடுக்கத் தொடங்கி விட்டது என்பதும் அவர் மனதுக்குள் தோன்றியது. எனவே ரஜினியை கதாநாயகனாகப் போட்டு இரண்டு படங்கள் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை சாண்டோ சின்னப்பா தேவர் மனதில் தோன்றியது.
கலைஞானம் மூலம் ரஜினிக்கு சின்னப்பா தேவர் அழைப்பு விடுத்தார். அடுத்த அரை மணி நேரத்தில் சின்னப்பா தேவர் அலுவலகத்தில் ரஜினி இருந்தார். அவரது எளிமை, பழகும் விதம் சின்னப்பா தேவருக்கு மிகவும் பிடித்துப் போனது.
அதுவும் சின்னப்பா தேவரிடம் எந்த ஈகோவும் பார்க்காமல் ரஜினி ஆசிப் பெற்றார். இதனால் சின்னப்பா தேவர் மிகவும் நெகிழ்ந்து போனார். முருகா... முருகா... என்று உச்சரித்தப்படி ரஜினியை 2 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து முன்பணம் கொடுத்தார். இதுவரை ரஜினி வாங்கி வந்த சம்பளத்தை விட 2 மடங்கு அதிகமாகக் கொடுத்தார். கட்டுக் கட்டுகளாக அவர் அள்ளிக் கொடுத்தப் பணத்தை ரஜினி பணிந்து பவ்யமாக வாங்கிக் கொண்டார்.
அப்போது சின்னப்பா தேவர் கூறுகையில், "தம்பி உனக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கு. தமிழ்த்திரை உலகில் உனக்கு என்றொரு இடம் உருவாகி விட்டது. என் 2 படங்களில் நடித்து முடித்ததும் நீ சொந்த வீட்டில் குடியேறி விட வேண்டும். என் அப்பன் முருகன் உன்னுடன் இருக்கிறான் என்றார்.
தமிழ்க் கடவுள் முருகனை முன் நிறுத்தி சாண்டோ சின்னப்பா தேவர் ஆசீர்வதித்ததும் ரஜினி மேலும் நெகிழ்ச்சியானார். முருகனின் மறு உருவமாக அவர் தேவரைப் பார்த்தார். அந்த சமயத்தில் ரஜினி பிரபல இயக்குனர் ஸ்ரீதரின் "இளமை ஊஞ்சலாடுகிறது" படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
சிவந்த மண் படத்துக்குப் பிறகு ஸ்ரீதர் முழு மனதுடன் எந்த புதுப்படத்திலும் பணியாற்றவில்லை. எம்.ஜி.ஆர். நடித்த உரிமைக் குரல் படத்தை இயக்கினாலும் அவருக்குள் ஒருவித சோர்வு இருந்து கொண்டே இருந்தது. அந்த சோர்வை விரட்டி அடிக்கும் வகையில் ரஜினி நடித்த இளமை ஊஞ்சலாடுகிறது படம் அமைந்தது. அந்த படம் தயாரிக்கப்பட்ட போது ஸ்ரீதரிடம் பழைய சுறுசுறுப்பும் புத்துணர்வும் ஏற்பட்டு இருந்தது. இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் அவர் கமலுக்கும், ரஜினிக்கும் சமமான வாய்ப்பு கொடுத்திருந்தார்.
ரஜினி தொழில் அதிபர். அவர் நிறுவனத்தில் மானேஜராக பணிபுரியும் கமல் ஸ்ரீபிரியாவை விரும்புகிறார். அவர்களை ரஜினி சேர்த்து வைப்பதுதான் இந்த படத்தின் கதை.
1978-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி வெளியான இளமை ஊஞ்சலாடுகிறது 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது. ரஜினியின் மாறுபட்ட நடிப்பை இந்த படத்தில் தமிழக ரசிகர்கள் கண்டுகளித்தனர்.
இதற்கிடையே கல்கி வார இதழின் வெள்ளி விழா ஆண்டில் பரிசுப் பெற்ற உமாசந்திரனின் "முள்ளும் மலரும்" நாவலை, சினிமாப் படமாக எடுக்க வேண்டும் என்று இயக்குனர் மகேந்திரன் விரும்பினார்.
குறிப்பாக அந்த நாவலில் வரும் காளி கதாபாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் படத் தயாரிப்பாளரான ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் அதை ஏற்கவில்லை. "வில்லனா நடிக்கிற ஆளை எப்படி கதாநாயகனாகப் போட முடியும்" என்று எதிர்த்தார்.
மகேந்திரன் அதுபற்றி கவலைப்படவில்லை. இந்த படத்தில் ரஜினிதான் நடிப்பார். சம்மதம் என்றால் அடுத்தப்படியாகப் பேசலாம் என்று மகேந்திரன் திட்டவட்டமாக கூறி விட்டார்.
மகேந்திரனிடம் காணப்பட்ட பிடிவாதத்தைப் பார்த்து படத்தயாரிப்பாளர் வேணு செட்டியார் இறங்கி வந்தார். முள்ளும் மலரும் படம் தயாரிக்கும் பணிகள் தொடங்கியது. அந்த படத்தில் ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, சரத்பாபு, வெண்ணிற ஆடைமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
இந்த படத்தில் காளி என்ற வேடத்தில் ரஜினி, மங்கா என்ற வேடத்தில் படாபட் ஜெயலட்சுமி, வள்ளி என்ற வேடத்தில் ஷோபா நடித்து இருந்தனர். இளமையிலேயே பெற்றோரை இழந்த ரஜினி கஷ்டப்பட்டு உழைத்து வாழ்க்கையில் முன்னேறுகிறார். தனது ஒரே தங்கையான வள்ளி (ஷோபா) மீது உயிரையே வைத்து இருக்கிறார்.
டிராலி டிரைவராக பணிபுரியும் காளியை அந்த ஊருக்கு வரும் புதிய என்ஜினீயர் (சரத்பாபு) வேலையை விட்டு நீக்குகிறார். இதனால் ஆத்திரம் அடையும் காளி அளவுக்கு அதிகமாக மது குடிக்கிறார். போதையில் விபத்தில் சிக்கி ஒரு கையை இழக்கிறார்.
அவரிடம் மங்கா (படாபட் ஜெயலட்சுமி) அடைக்கலம் தேடி வருகிறார். அவரை காளி திருமணம் செய்து கொள்கிறார். இந்த நிலையில் என்ஜினீயருக்கும், வள்ளிக்கும் காதல் ஏற்படுகிறது. அதை காளி ஏற்கவில்லை. என்றாலும் என்ஜினீயரை திருமணம் செய்ய வள்ளி முடிவு செய்கிறார்.
ஆனால் திருமணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு அண்ணன் மீதுள்ள பாசத்தால் ஓடி வருவார். தங்கையின் பாசத்தை கண்டு உருகிப்போகும் காளி என்ஜினீயருக்கே வள்ளியை திருமணம் செய்து கொடுப்பார். அண்ணன்-தங்கை பாசத்தை புதிய பாணியில் காண்பித்த இந்த படம் 1978-ம் ஆண்டு ஆகஸ்டு 17-ந்தேதி வெளியானது.
இந்த படத்தில் ரஜினி கோபம், இயலாமை, தங்கை மீதான பாசம், எதிர்காலம் குறித்த கவலை, வெறுப்பு போன்ற நடிப்பை மிக சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார். அனைவரும் ரஜினி அந்த படத்தில் காளி கேரக்டராகவே மாறி விட்டதாக பாராட்டினார்கள். டைரக்டர் பாலச்சந்தர் ரஜினி நடிப்பை பார்த்து பிரமித்து பாராட்டி கடிதம் கொடுத்தார். அந்த கடிதத்தை இப்போது வரை ரஜினி பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.
இந்த படப்பிடிப்பின்போது ரஜினியை படாபட் ஜெயலட்சுமி கிண்டல் செய்து பேசிக் கொண்டே இருப்பார். இதுபற்றி ரஜினி ஒரு பேட்டியில் கூறுகையில், "முள்ளும் மலரும் படத்தில் நடிக்கும் போது எனது தமிழை படாபட் ஜெயலட்சுமி அடிக்கடி கிண்டல் செய்து கொண்டே இருப்பார். அதே சமயத்தில் ஏதாவது நகைச்சுவையாக பேசி உற்சாகம் கொடுப்பார். என்னடா... இது?. ஒரு பொம்பளைக்கே இவ்வளவு தைரியம் இருக்கும் போது நாம் ஏன் அமைதியாக இருக்க வேண்டும் என்று பேசத் தொடங்கினேன்" என்றார்.
இந்த படத்துக்கு முன்பு ரஜினி படப்பிடிப்பு தளங்களில் மற்றவர்களிடம் அவ்வளவாக பேசியது கிடையாது. ஆனால் ரஜினியின் அந்த குணத்தை படாபட் ஜெயலட்சுமி மாற்றி இருந்தார். அதன் பிறகு ரஜினியின் நடவடிக்கைகளிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.
இந்த படத்தில் வரும் "காளி கெட்டப் பய சார்" என்ற ரஜினியின் வசனம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. அதுபோல இந்த படத்தில் இடம் பெற்ற "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்", "நித்தம் நித்தம் நெல்லுச் சோறு", "ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்" பாடல்கள் எல்லாராலும் இனிமையாக ரசிக்கப்பட்டன.
ஆனால் முள்ளும் மலரும் படப்பிடிப்பின் இறுதி நாட்களில் ரஜினிக்கும், படக்குழுவினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிருங்கேரியில் முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டது என்று கூறப்பட்ட நிலையில் ரஜினியை மீண்டும் நடிக்க அழைத்தனர். ஆனால் அவர் நடிக்க வரமுடியாது என்று மறுத்தார்.
அவரை சமரசம் செய்ய முடியாமல் அனைவரும் திணறினார்கள். அந்த சமயத்தில்தான் ரஜினியின் மனநிலையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட தொடங்கி இருந்தது. அது என்ன மாற்றம்? என்பதை பார்க்கலாம்.






